`தமிழர் என்ற அடையாளத்துடன் இருப்போம்' - பாரதிராஜா

சிவகங்கை மாவட்டம், கச்சநத்தம் கிராமத்தில் கடந்த 28-ம் தேதி, மாற்று சாதியினரால் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை செய்யப்பட்டு ஐந்து பேர் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமாவளவன்

இந்தக் கொடூர தாக்குதலில் சம்பந்தப்பட்ட ஐந்து பேர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், ஒட்டுமொத்தவர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். கொல்லப்பட்டவர்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணமும் அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கச்சநத்தம் கிராம மக்களும் பல்வேறு அமைப்பினரும் மதுரை அண்ணா நிலையம் அருகே போராட்டத்தைத் தொடங்கினர். இந்தப் போராட்டத்தில் இயக்குநர் பா.இரஞ்சித், ஜான்பாண்டியன், டாக்டர் கிருஷ்ணசாமி, சாமுவேல்ராஜ் ஆகியோர்  கலந்துகொண்டனர். தொடர் போராட்டத்துக்குப் பிறகு மாநில அரசு, இறந்தவர்களுக்கு நிவாரண நிதியை 15 லட்சமாக உயர்த்தியும், சம்பந்தப்பட்ட காவல்துறை இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ ஆகியோரை சஸ்பெண்ட் செய்தும் உத்தரவிட்டது.

அஞ்சலி செலுத்தும் பாரதிராஜா உள்ளிட்டோர்

அதைத்தொடர்ந்து இன்று காலையில் போராட்டத்தில் திருமாவளவன் கலந்துகொண்டார். அதன் பிறகு போராட்டம் முடிவுக்கு வந்து, அரசு மருத்துவமனை பிணவறையில் இருந்த மூன்று பேரின் உடல்களை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். அங்கு வந்து அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குநர் பாரதிராஜா, சீமான், அமீர், ராம், ஆகியோர் கச்சநத்தம் மக்களுக்கு ஆறுதல் கூறினார்கள். அப்போது பேசிய பாரதிராஜா, ''நாம் அனைவரும் தமிழர் என்ற அடிப்படையில் ஒன்று சேர வேண்டும். நம்மை பிரித்தாள  பார்க்கிறார்கள். நாம் வக்கிரங்களை அழித்துவிட்டு ஒற்றுமையான தமிழ் மக்களாக வர வேண்டும்'' என்றார். சீமான் பேசும்போது, ''சாதியில் பெருமை இல்லை. தமிழ் சமூகமே தாழ்த்தப்பட்டுத்தான் உள்ளது. இதில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று நமக்குள்ளே சண்டையிட்டுக்கொள்வது மோசமானது'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!