"தலை முதல் கால் வரை லஞ்சம்!’’ - ’எடப்பாடி’ பழனிசாமியின் பொதுப்பணித்துறையில் 'சிவாஜி' படம் போல முறைகேடு | Corruption in public work department

வெளியிடப்பட்ட நேரம்: 20:48 (01/06/2018)

கடைசி தொடர்பு:20:48 (01/06/2018)

"தலை முதல் கால் வரை லஞ்சம்!’’ - ’எடப்பாடி’ பழனிசாமியின் பொதுப்பணித்துறையில் 'சிவாஜி' படம் போல முறைகேடு

எடப்பாடி பழனிசாமி துறையில் லஞ்சம்

``முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுப்பணித்துறையில் கொள்ளையோ கொள்ளை நடக்கிறது. பொதுப்பணித்துறையில் ஒரு கோடி ரூபாய்க்கு டெண்டர் எடுக்க வேண்டுமானால், அதில் பாதித் தொகையை முதல்வர் முதல் துறையின் கீழ்மட்ட அதிகாரிகள்வரை கப்பம் கட்டவேண்டியிருக்கிறது. இதனால் நேர்மையான ஒப்பந்ததாரர்கள் பலர், இந்தத் தொழிலைவிட்டே வெளியேறி விட்டார்கள்'' என்கிறார்கள் இந்தத் தொழிலில் அனுபவம் வாய்ந்தவர்கள். இந்நிலையில், ராசிபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜூ தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் பொதுப்பணித்துறையில் பல்வேறு ஆவணங்களைக் கேட்டிருக்கிறார். முதற்கட்டமாக சேலம் மண்டல பொதுப்பணித்துறை அலுவலகத்தை ஆய்வுசெய்தும் வந்திருக்கிறார்.

இந்த ஆய்வு குறித்து நல்வினை விஸ்வராஜூவை ராசிபுரத்தில் சந்தித்துப் பேசியபோது, ``வழக்கறிஞர் என்ற முறையில் பொதுமக்களுக்கு சட்ட ஆலோசனைகளை வழங்கி வருவதுடன், 'தகவல் அறியும் உரிமைச் சட்டம்' குறித்து பல விளக்கங்களையும் தெரிவித்து வருகிறேன். இதுகுறித்த எங்கள் முகநூல் பக்கத்தில் மூன்று லட்சத்து 35 ஆயிரம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். எங்களுடன் தொடர்பில் இருக்கும் ஏராளமான ஒப்பந்ததாரர்களும், அரசு உயர் அதிகாரிகளும் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே தமிழக அரசின் பொதுப்பணித்துறையைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள முடிந்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் பல கேள்விகளைக் கேட்க முடிந்தது.

2011-ம் ஆண்டுக்கு முன்பு அரசுப் பணிகளை டெண்டர் எடுத்துச் செய்யக்கூடிய ஒப்பந்ததாரர்கள், அரசியல்வாதிகளுக்கு மூன்று சதவிகிதம், அரசு அதிகாரிகளுக்கு இரண்டு சதவிகிதம் என மொத்தம் 5% லஞ்சமாகக் கொடுத்துப் பணிகளைப் பெற்றுள்ளார்கள். ஆனால், 2011-ம் ஆண்டுக்குப் பிறகு பொதுப்பணித்துறையில் உள்ள பொதுக் கட்டடம், மருத்துவமனைக் கட்டடம், கல்லூரிக் கட்டடம், எலெக்ட்ரிகல் போன்ற பணிகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சரான முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு 9%, அமைச்சரின் உதவியாளருக்கு 1%, உள்ளுர் அமைச்சர், மாவட்டச் செயலாளர் 2%, உள்ளுர் சட்டமன்ற உறுப்பினருக்கு 5% என அரசியல்வாதிகளுக்கு 17 சதவிகிதமும், உதவிப் பொறியாளருக்கு 3%, உதவி செயற்பொறியாளருக்கு 2%, செயற்பொறியாளருக்கு 2%, கண்காணிப்புப் பொறியாளருக்கு 1%, தலைமைப் பொறியாளருக்கு 1% என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு மட்டும் 9 சதவிகிதம் உள்பட மொத்தம் 26 சதவிகிதம் லஞ்சம் கொடுத்துப் பணிகள் பெறப்படுகின்றன. இறுதியாக ஒப்பந்ததாரர்களின் லாபம் 20% கழித்தால் மொத்தம் 46% தொகையைச் சாப்பிட்டுவிட்டு வெறும் 54% மட்டுமே பணிகளைச் செய்கிறார்கள். 

அதாவது, பொதுப்பணித்துறையில் குறிப்பிட்ட ஒரு பணிக்காக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தால் 46 லட்சம் ரூபாய் லஞ்சம் மற்றும் லாபமாகச் சென்று விடும். வெறும் 54 லட்சம் ரூபாய் மதிப்பளவுக்கு மட்டுமே பணிகள் நடைபெறும். பொதுப்பணித் துறையின்கீழ் வரும் நீர்வள ஆதாரப் பிரிவில் ஏரி, குளம், ஆறு போன்ற நீர்நிலைகளைத் தூர் வாருதல், கரைகளைப் பலப்படுத்துதல் போன்ற பணிகளைப் பெறவேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரான முதல்வருக்கு 15%, அவரின் உதவியாளருக்கு 1%, லோக்கல் அமைச்சர், மாவட்டச் செயலாளருக்கு 4%, லோக்கல் எம்.எல்.ஏ.-வுக்கு 5% என அரசியல்வாதிகளுக்கு 25 சதவிகிதமும், கண்காணிப்புப் பொறியாளர் மற்றும் உட்கோட்ட அலுவலருக்கு 3%, செயற்பொறியாளருக்கு 3%, உதவி செயற்பொறியாளருக்கு 5%, உதவிப் பொறியாளருக்கு 5% என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு 16 சதவிகிதம் ஆக மொத்தம் 41% லஞ்சம் கொடுத்துப் பணிகளைப் பெறுகிறார்கள். இறுதியாக கான்ட்ராக்டர்கள் லாபம் 20% என மொத்தம் 61% பணத்தை எடுத்துக்கொண்டு வெறும் 39 சதவிகிதத் தொகைக்கு மட்டுமே பணிகளைச் செய்கிறார்கள். அதாவது, பொதுப்பணித்துறையில் நீர்வள ஆதாரப் பிரிவில் ஒரு பணிக்கு ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டால் லஞ்சம், கான்ட்ராக்டரின் லாபம் போக 39 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே பணிகள் நடைபெறும். கடந்த பட்ஜெட்டில் நீர் வள ஆதாரத்துக்கு மட்டும் 6,127 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் வெறும் 800 கோடி ரூபாய்கூட வேலை செய்ய மாட்டார்கள்.

வழக்கறிஞர் விஸ்வராஜூ

இந்த நிபந்தனைகளுக்கெல்லாம் எந்த கான்ட்ராக்டர்கள் சம்மதிக்கிறார்களோ, அவர்கள் மட்டுமே ஆன்லைன் டெண்டரில் கலந்துகொள்ள முடியும். இதில் அரசியல்வாதிகளுக்கு கொடுக்க வேண்டிய கமிஷனை முதலில் கொடுத்தால் மட்டுமே பணிக்கான அக்ரிமென்ட் உறுதி செய்யப்படும். லஞ்சம் ரொக்கமாக ரூ.2,000 மற்றும் ரூ.500 நோட்டுகளாக மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் என்பதெல்லாம் தனிக்கதை. இதுதவிர, ஒவ்வொரு வருடமும், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பொதுப்பணித்துறை மூலம் மராமத்துப் பணிகளுக்காக 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்தத் தொகையில் வெறும் 50 லட்சம் ரூபாயை மட்டும் செலவு செய்துவிட்டு ஒன்றரை கோடி ரூபாயை துறை அமைச்சரும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் எடுத்துக் கொள்கிறார்கள். தினக்கூலி பணிகள் என்று ஒவ்வொரு வருடமும், ஒவ்வொரு மாவட்டத்துக்கு 15 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதில் ஒரு பைசாகூட செலவு செய்யப்படுவதில்லை. மொத்தமாக ஆட்டையப் போட்டுக் கொள்கிறார்கள். இவை அனைத்தும் பொதுப்பணித்துறையில் எழுதப்படாத சட்டமாக இருந்து வருகிறது.

இதையடுத்து, முதற்கட்டமாக சேலம் வட்டாரப் பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு  உட்பட்ட நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பணிபுரியும் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் பெயர்கள், கல்வித் தகுதி, பணியில் சேர்ந்த நாள், பதவி உயர்வு பெற்ற நாள், பணி மாறுதல் விவரம், ஓய்வு பெற்ற நாள், கோப்புகளில் கையொப்பம் செய்யும் மொழி, மாவட்டத்தில் நடந்து முடிந்த பணிகள், நடைபெற்றுக் கொண்டிருக்கும் பணிகள் பற்றிய  விவரம், திட்ட மதிப்பீடு, திட்டக் காலம், ஒப்பந்ததாரர் பெயர், முகவரி, கள ஆய்வு செய்த அலுவலர் பெயர், பதவி, கள ஆய்வு செய்த தேதி, செக் மெசர்மென்ட் செய்த அலுவலர்கள், அலுவலர் பெயர், பதவி, செக் மெசர்மென்ட் செய்த தேதி என பல கேள்விகளை எழுதி, அவற்றுக்குரிய நகல்களையும் கேட்டிருக்கிறேன். இதற்கான நகல் கொடுப்பதற்கு ஓரிரு மாதங்கள் ஆகும். 

சேலம் மாவட்ட பொதுப்பணித்துறை ஆவணங்களை நேரில் ஆய்வுசெய்ய அனுமதி வழங்கினார்கள். அதையடுத்து, சேலம் பொதுப்பணித்துறை ஆவணங்களில் ஆய்வுகளை மேற்கொண்டேன். இதில் நான் கேட்ட கேள்விகளுக்கு சம்பந்தமே இல்லாத 26 ஆவணங்களைக் காண்பித்தனர். அவற்றில் இருந்து பல குறிப்புகளை எடுத்து வந்திருக்கிறேன்.

வெங்கடாசலம்அதையடுத்து, துறை அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் என் நண்பர்கள் மூலமாக எனக்குத் தூது அனுப்பி வருகிறார்கள். நான் எந்தவிதமான சமரசத்தையும் ஒப்புக்கொள்ள மாட்டேன். தன் சொந்த தாய்க்கு மின்விசிறிகூட வாங்கித் தராமல் ஆட்சிசெய்த உத்தமர்கள் வாழ்ந்த இந்த மண்ணில் மக்களின் வரிப்பணத்தை பங்குபோட்டு சாப்பிடும் இந்தப் பயங்கரவாதிகளை நான் சும்மா விடமாட்டேன். இந்த முறைகேட்டில் யார் யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்களோ, அவர்கள் அனைவரையும் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவேன்'' என்றார்.

இதுபற்றி நாமக்கல்லில் உள்ள சில ஒப்பந்ததாரர்களிடம் பேசியபோது, ``பொதுப்பணித்துறையில் மனசாட்சியே இல்லாமல் அட்டூழியம் செய்கிறார்கள். இதை கேட்பதற்கு யாரும் இல்லை. மனசாட்சியை இழந்து வேலைசெய்ய முடியாது என்று என்னைப் போன்று ஒருசில நேர்மையான ஒப்பந்ததாரர்கள் இந்த துறையை விட்டே ஒதுங்கிக் கொண்டோம். அவர்கள் கேட்கும் கமிஷனுக்கு சம்மதித்தவர்கள் மட்டுமே ஓப்பன் டெண்டரில் கலந்துகொள்ள முடியும். போலியான பில் கொடுப்பதற்கும், தரமற்ற பொருள்களுக்குத் தரச்சான்றினை சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் தனியார் கல்லூரிகள் கொடுக்கின்றன. 2011-ம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற பணிகள் முழுவதுமே தரமற்றதாக இருக்கும்'' என்றார்.

இதுபற்றி பொதுப்பணித்துறை சேலம் வட்டார (பொது கட்டடம்) கண்காணிப்புப் பொறியாளர் மணியிடம் பேசியதற்கு, ``இது முழுக்க முழுக்க பொய்யான தகவல். பொதுப்பணித்துறையில் நடைபெறும் அனைத்து ஒப்பந்தங்களும் ஓப்பன் டெண்டர் மூலமே விடப்படுகிறது. இதில் யாருக்கும் எந்தவிதமான கமிஷனும் கொடுப்பதும் இல்லை. பெறுவதும் இல்லை'' என்று முடித்துக்கொண்டார்.

இதுபற்றி அ.தி.மு.க. மாநகர் மாவட்டச் செயலாளரும், சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வெங்கடாசலத்திடம் கேட்டபோது, ``பொதுப்பணித்துறையில் டெண்டர் எடுப்பதற்கு ஆட்சியாளர்கள், அதிகாரிகளுக்கு கமிஷன் கொடுப்பதாகச் சொல்வது முழுக்க, முழுக்க தவறான தகவல். தற்போது அனைத்து டெண்டர்களும் ஆன்லைன் மூலமாகவே விடப்படுவதால் டெண்டரை யார் எடுக்கிறார்கள் என்பதுகூட எங்களுக்குத் தெரியாது. ஒப்பந்ததாரர்களிடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளதால் பணிகளை மைனஸில் எடுக்கிறார்கள். அவர்களுக்குள் நடக்கும் போட்டியால் இதுபோன்ற வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள்'' என்றார்.


டிரெண்டிங் @ விகடன்