`மோடி அலை ஓய்ந்துவிட்டது; இனி ராகுல் அலைதான்!’ - திருநாவுக்கரசர் பளீச் | TN congress president Tirunavukarasar speaks about Political scenario today

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (01/06/2018)

கடைசி தொடர்பு:21:00 (01/06/2018)

`மோடி அலை ஓய்ந்துவிட்டது; இனி ராகுல் அலைதான்!’ - திருநாவுக்கரசர் பளீச்

தமிழகத்தில் தீவிரவாதிகள் மற்றும் சமூக விரோதிகள் ஊடுருவியுள்ளதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது கண்டனத்துக்குறியது என காங்கிரஸ் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார்.

                                          

மறைந்த பா.ம.க-வின் வன்னியர் சங்கத் தலைவர் குருவின் இல்லத்துக்கு ஆறுதல் கூறச் சென்ற திருநாவுக்கரசர் அரியலூர் அருகேயுள்ள வி.கைகாட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறுகையில்,``தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் முதல்நாளில் பல்வேறு பிரச்னைகளை எழுப்புவதற்காக தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கவன ஈர்ப்பு மற்றும் ஒத்திவைப்புத் தீர்மானத்தை அளித்துள்ளனர். ஆளும் கட்சியினர் அதை எடுத்துக்கொள்ள அனுமதிக்காததாலும் சட்டமன்றத்தில் எதிர்கட்சியினர் பேச அனுமதிக்காததினாலும் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். சட்டமன்றத்தில் பேசுவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு முழுமையான வாய்ப்பு தரப்படவில்லை என்று மக்களுக்கு உணர்த்துவதற்காக மாதிரி சட்டமன்றக் கூட்டம் தி.மு.க சார்பில் நடத்தப்பட்டது. இதில் தோழமை கட்சி எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொண்டனர். மாதிரி சட்டமன்றம் நடக்காத நாள்களில் சட்டமன்ற கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொள்ளவார்கள் என்று முடிவு செய்யப்பட்டு, அதன்படி கடந்த 2 நாள்களாக காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கலந்துகொண்டுள்ளனர்.

                                        

பொதுவாக ஆளும் கட்சியினர் சட்டமன்றத்தில் அமைதியாக இருக்க வேண்டும். எதிர்க்கட்சியினர் போராட்ட குணத்துடன்தான் சட்டமன்றத்துக்குள் வருவார்கள். ஏனென்றால் மக்கள் பிரச்னைகளை எடுத்துக்கூறுவதே அவர்களின் கடமை. தமிழகத்தில் சமூகவிரோதிகள் மற்றும் தீவிரவாதிகள் ஊடுருவி விட்டனர், அவர்களுக்கான பயிற்சிக் களமாக தமிழகம் மாறியுள்ளது என மத்திய அமைச்சராக உள்ள பொன்.ராதாகிருஷ்ணன் கூறுவது கண்டனத்துக்குறியது.

தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவது மாநில அரசின் கடமைமட்டுமல்ல, மத்திய அரசுக்கும் அதில் பொறுப்பு உண்டு. தீவிரவாதிகள் என்பவர்கள் உள்நாட்டு தீவிரவாதிகளா வெளிநாட்டுத் தீவிரவாதிகளா என கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய அமைச்சர் தமிழ்நாட்டில் தீவிரவாதிகள் ஊடுருவிவிட்டனர் எனக்கூறுவது விஷமத்தனமானது. அ.தி.மு.க, பி.ஜே.பி கூட்டணி மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி நடத்துவதாக மக்கள் கருதுகின்றனர். அ.தி.மு.க, பி.ஜே.பி-யின் பினாமியாக ஆட்சி நடத்துவதை திசை திருப்பவே தி.மு.க-வுடன், அ.தி.மு.க கூட்டணி வைத்துள்ளதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறுவதாக நான் கருதுகிறேன்.

நீர் பங்கீடு குறித்த பிரச்னை கட்சி பிரச்னையல்ல. சட்டரீதியான பிரச்னை, இதை சட்டரீதியாகத்தான் அணுக முடியும். காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது மத்திய அரசு. கர்நாடகாவில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று செயல்படுத்த வேண்டும். இதை வலியுறுத்தி வரும் காலங்களில் காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டின் நலனுக்காகப் போராடும். தேவையானால் தேவையானவர்களை தேவையான நேரத்தில் காங்கிரஸ் கட்சி சந்திக்கும். மத்திய அரசில் நடைபெறும் ஊழல்கள் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். ஆனால் எதற்கும் மோடி இதுவரை பதிலளிக்கவில்லை. எனவே, மௌனமே சம்மதத்துக்கு அறிகுறி என எடுத்துக்கொள்ளலாம்.

மோடியின் அலை ராகுல்காந்தியால் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற இடைத்தேர்தல்களின் முடிவுகள் பா.ஜ.க-வின் செல்வாக்கு சரிந்து வருகிறது என்பதை காட்டுகிறது. மோடியின் அலை ஓய்ந்து விட்டது. ராகுலின் அலை தொடங்கிவிட்டது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேரவேண்டிய நிலை உருவாகியுள்ளது. காங்கிரஸ்தான் அதற்கு தலைமை ஏற்க முடியும். ராகுல்காந்தியின் தலைமையிலேயே எதிர்க்கட்சிகள், மாநில கட்சிகள் வரக்கூடிய தேர்தல்களைச் சந்திக்கும்’’என்று கூறினார்.