‘பெற்றோர்களுக்கு சால்வை; மாணவர்களுக்கு பரிசு!’ - அசத்தும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்

பள்ளி

ஈரோட்டில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஒன்றின் தலைமையாசிரியர், பள்ளியில் புதிதாகச் சேர்ந்த மாணவர்களுக்கு பரிசுப் பொருள்களை வழங்கியும், அவர்களது பெற்றோர்களுக்கு சால்வை அணிவித்தும் மரியாதை செய்து அசத்தியிருக்கிறார்.

பள்ளி

ஈரோடு எஸ்.கே.சி சாலையில் அமைந்திருக்கிறது மாநகராட்சி  நடுநிலைப்பள்ளி. கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 1-ம் தேதியான இன்று பள்ளி திறந்ததையொட்டி, புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவர்களை வரவேற்கும் பொருட்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கியும், அவர்களுடைய பெற்றோர்களுக்கு சால்வை அணிவித்தும் மரியாதை செய்திருக்கிறார் பள்ளியின் தலைமையாசிரியர். ஆசிரியர்கள் கொடுத்த இந்த உற்சாக வரவேற்பினால் மாணவர்கள் மட்டுமல்லாது பெற்றோர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து பள்ளியின் தலைமையாசிரியர் சுமதியிடம் பேசினோம். ``பொதுவாகவே நான் ஏதாவது வித்தியாசமாக செய்யணும்னுபள்ளி நினைப்பேன். அந்தவகையில், போன வருஷம் ஆரத்தி எடுத்து குழந்தைகளை பள்ளிக்கு வரவேற்றோம். அதுக்கு முந்திய வருஷம் மாலை போட்டு வரவேற்றோம். இது புதுசா ஸ்கூலுக்கு வர்ற மாணவர்களுக்கு இயல்பான, பயமில்லாத சூழ்நிலையை உண்டாகும். இன்னைக்கு பல தனியார் பள்ளிக்கூடங்கள் வந்துட்டதால, எங்களை மாதிரியான அரசுப் பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் சேர்க்கை குறைஞ்சு போகுது. சாதாரண மிடில்கிளாஸ் மக்கள் கூட தங்களுடைய குழந்தைகளை, தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் சேர்க்கணும்ங்கிற மனநிலையில் இருக்காங்க. அப்படியிருக்க, எங்களோட பள்ளிக்கூடத்துல குழந்தைகளை சேர்க்கணும்னு வர்ற பெற்றோர்களை கௌரவிக்கணும்னுதான் அவங்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றோம். அதேபோல, ‘முதல் நாளே ஸ்கூல்ல பரிசு எல்லாம் கொடுக்குறாங்களே’ன்னு மாணவர்களுக்கு பாசிட்டிவ் எனர்ஜி கொடுக்க அவர்களுக்கு பரிசுகளைக் கொடுத்து வரவேற்றோம்.

தனியார் பள்ளிகளில் உள்ள வசதியை இந்த மாணவர்களும் பெற வேண்டுமென, ஸ்பான்சர்களின் உதவியோடு ஒவ்வொரு வருடமும் மாணவர்களுக்கு டைரி, ஐ.டி.கார்டு, பெல்ட் போன்றவற்றை கொடுத்துட்டு வர்றோம். அதுமட்டுமல்லாமல், மாணவர்களின் தனித்திறனைக் கண்டு அவர்களுக்கு ஆங்கிலம் பயிற்றுவித்தல், கம்ப்யூட்டர் பயிற்சி, கராத்தே போன்றவற்றைக் கற்றுக்கொடுத்தும் வருகிறோம். கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் நான் இந்தப் பள்ளியில் தலைமையாசிரியராக பொறுப்பேற்றபோது மொத்தம் 77 மாணவர்கள்தான் இருந்தனர். இந்த வருடம் 37 குழந்தைகள் அட்மிஷன் போட்டிருக்காங்க. இப்போ 170 குழந்தைகளுக்கு மேல படிக்குறாங்க. வருங்காலத்துல, ‘உங்க ஸ்கூல்ல எங்க புள்ளைங்களுக்கு எப்படியாவது ஒரு இடம் வாங்கிக் கொடுங்க’என்று சொல்லுமளவுக்கு எங்களுடைய பள்ளியின் தரத்தை உயர்த்த வேண்டுமென, நானும் எங்களுடைய ஆசிரியர்களும் பணியாற்றி வருகிறோம்” என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!