நெல்லையில் முக்கோண ஆன்மிக சுற்றுலாத் தலங்கள்! அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை

நெல்லை மாவட்டம், ராதாபுரம் பகுதியில் உள்ள உவரி கப்பல் மாதா ஆலயம், ஆத்தாங்கரை பள்ளிவாசல் தர்கா, விஜயாபதி விசுவாமித்திரர் ஆலயம் ஆகிய முன்று மதங்களின் திருத்தலங்களை இணைத்து முக்கோண ஆன்மிக சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் வகையில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம், ராதாபுரம் பகுதியில் உள்ள உவரி கப்பல் மாதா ஆலயம், ஆத்தாங்கரை பள்ளிவாசல் தர்கா, விஜயாபதி விசுவாமித்திரர் ஆலயம் ஆகிய முன்று மதங்களின் திருத்தலங்களை இணைத்து முக்கோண ஆன்மிக சுற்றுலாத் தலங்கள் உருவாக்கி அதை மேம்படுத்தும் வகையில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. 

சுற்றுலாத் தலங்கள்

நெல்லை மாவட்டத்தின் சுற்றுலா தலங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராதாபுரம் தொகுதியில் எம்.எல்.ஏ-வான இன்பதுரை அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்னர் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் உவரி கப்பல் மாதா ஆலயம், ஆத்தாங்கரை பள்ளிவாசல் தர்கா, விஜயாபதி விசுவாமித்திரர் ஆலயம் ஆகிய தலங்களுக்குச் சென்று ஆய்வு செய்தனர். 

அதன் தொடர்ச்சியாக இந்தத் திருத்தலங்களுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதால் இவற்றை முக்கோண ஆன்மிக சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவது என சட்டமன்றத்தில் முடிவு செய்யப்பட்டது. அத்துடன், தெற்குகள்ளிகுளம் பனிமயமாதா ஆலயத்தையும் சுற்றுலாத் துறையின் மேம்பாட்டு நிதி மூலம் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்திடவும் அடிப்படை வசதிகளைச் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்தப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் இன்று நேரில் சென்று பார்வையிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’சுற்றுலாத் துறையின் மூலம் ஆற்றாங்கரை பள்ளிவாசல் தர்கா அருகில் பெண்கள் சுகாதார வளாகம் அமைக்க 6 லட்சம் ரூபாய் மதிப்பிலும், பயணிகள் காத்திருப்புக் கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளது. 

உவரி கப்பல் மாதா ஆலயம்

உவரி கப்பல் மாதா ஆலயம் அருகில் பெண்கள் மற்றும் ஆண்கள் சுகாதார வளாகம், பயணிகள் காத்திருப்புக் கூடம், ஆழ்துளை கிணறு அமைத்து தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து தண்ணீர் வசதி செய்து கொடுத்தல் என அடிப்படை வசதிகளுக்காக ரூ.36.50 லட்சம் மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு பணிகள் நடைபெற உள்ளன. விஜயாபதியில் உள்ள விசுவாமித்திரர் ஆலயம் அடிப்படை வசதிகளுக்காக 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணிகள் நடைபெற இருக்கின்றன. 

இது தவிர, தெற்கு கள்ளிகுளம் ஊராட்சியில் உள்ள அதிசய பனிமயமாதா திருத்தலத்தில் 28 லட்சம் ரூபாய் மதிப்பிட்டில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அத்துடன், சாலைப் பணிகள் மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளும் விரைவாக தொடங்கப்பட இருக்கின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் முடிவடைந்த பின்னர் இந்தப் பகுதி சிறந்த ஆன்மிக சுற்றுலாத் தலமாக உருவாகும். அதனால் பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!