வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (02/06/2018)

கடைசி தொடர்பு:09:41 (02/06/2018)

”மேடையில் உள்ள அணி கூட்டணியாக மாற வேண்டும்” திருவாரூரில் முத்தரசன் பேச்சு!

திமுக தலைவர் கருணாநிதியின் 95 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருவாரூர் அடுத்த வன்மீகபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா அரங்கில் நடைபெற்றது.

கலைஞர் 95

திருவாரூரில் கருணாநிதியின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்  'திருவாரூரில் கலைஞர் 95' பெயரில் நடைபெறுகிறது இந்த விழாவின் தொடக்கமாக இன்று காலை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாலை பொதுக்கூட்டம் துவங்கியது.

இந்த நிகழ்ச்சியில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக பொது செயலாளர் க.அன்பழகன், திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

முத்தரசன்

இந்த விழாவில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்  முத்தரசன் பேசியபோது மறைமுகமாகக் கமலை சாடினார். "இடது பக்கமும் போகமாட்டேன், வலது பக்கமும் போக மாட்டேன் என்று கூறுகிறவர்கள் நடு சாலையில் சென்றால் லாரியில் தான் அடிபட வேண்டும். தமிழகத்தில் இடது புறம் வருவதைத் தான் மக்கள் விரும்புவார்கள்" என்றார்.

 மேலும், “தமிழகத்தில் ஆயிரக்கணக்கான பிரச்னைகள் உள்ளன. இவற்றை எடுத்துச் சொல்ல இடதுசாரிகள் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளுக்கு வாய்ப்பு இல்லை. சட்டசபையில் திமுக - காங்கிரஸ் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் சட்டசபையில் அவர்கள் தமிழக மக்களின் பிரச்னைகளை எடுத்துச் செல்ல முடியாத நிலை உள்ளது. இந்தச் சூழ்நிலையில் சட்டமன்ற கூட்டத்தொடரில் திமுக பங்கேற்று அதிமுக அங்குச் செய்கின்ற தில்லுமுல்லுகள் எல்லாம் எடுத்துரைக்க வேண்டும் இதனைத் தோழமை கட்சிகள் சார்பிலும் பொதுமக்கள் சார்பில் வலியுறுத்துகிறேன். அதைப்போலத் தமிழகத்தில் மக்கள் பிரச்னைகளை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் நீண்ட பயணமாக மகத்தான போராட்டங்களை நடத்தி வருகிறது. வகுப்பு வாதத்தை முறியடிக்கும்  சக்தியாக, அணியாக மாற வேண்டும். அதற்கு திமுக தலைமை ஏற்க வேண்டும். திரைப்படத்தில் போராட்டம் நடத்தலாம் எனக் கூறும் ரஜினி  நிஜவாழ்க்கையில் போராட்டம் நடத்த வேண்டாம் என சொல்கிறார். தற்போது மேடையில் உள்ள அணி கூட்டணியாக அமைய வேண்டும் அதற்கு ஸ்டாலின் தலைமை ஏற்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.

திருமாவளவன்

பின்னர் திருமாவளவன் பேசும்போது, "திமுக தலைவர் கருணாநிதி காங்கிரஸ் அல்லாத பிற மாநில முதல்வர்களை மாநில உரிமைகளுக்காக ஒருங்கிணைத்தவர். அந்த வகையில் தேசிய அளவில் மதச்சார்பற்ற  சக்திகளை ஒன்றிணைக்கத்  தேசிய அளவில் ஆற்றல் பெற்ற தலைவராக மு.க.ஸ்டாலின் விளங்குகிறார். அவரது தலைமையிலான எதிர்க்கட்சிகள்  ஒருங்கிணைந்த இந்த அணி தேர்தல் கூட்டணிக்காக மட்டுமன்றி மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கவும் மாநில சுயாட்சிக்கு மீட்டெடுக்கவும் ஒரு வரலாற்றுத் தேவையாக அமைந்துள்ளது. திமுகவை அழித்து விட்டால் பெரியாரின் சிந்தனைகளை அழித்துவிட முடியும் என்கின்ற வகையில் வகுப்புவாத சக்திகள் நினைக்கின்றன. இதே சூழ்நிலையில் கலைஞரைத்  தலைமையாக ஏற்றுக் கொண்ட பேராசிரியர் அன்பழகன், கருத்து வேறுபாட்டால் கழகத்தை விட்டு வெளியேறி கட்சி நடத்திக் கொண்டிருக்கின்ற வைகோ உள்ளிட்ட தலைவர்கள் ஸ்டாலினின் தலைமையை அங்கீகரித்திருக்கிறார்கள். எனவே விடுதலைச்  சிறுத்தை கட்சியும் அதனை வழி மொழிகிறது" எனத் தெரிவித்தார்.