``சட்டமன்றம் செல்வதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசித்து முடிவு” -ஸ்டாலின் | Stalin speech in karunanithi birthday function

வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (02/06/2018)

கடைசி தொடர்பு:09:29 (02/06/2018)

``சட்டமன்றம் செல்வதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசித்து முடிவு” -ஸ்டாலின்

கலைஞரின் 95-வது பிறந்தநாள் விழா திருவாரூரில் நடைபெற்றது. விழாவில் ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர். 

ஸ்டாலின்

இந்த விழாவில் இறுதியாகப் பேசிய தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், ”நான் உறுதியாகச் சொல்லுகிறேன், கலைஞரின் நூற்றாண்டுப் பிறந்தநாள் விழா கொண்டாடுவோம். அதற்கான முன்னோட்டம்தான் இந்த விழா. தி.மு.க-வை உருவாக்கி அரை நூற்றாண்டுக் காலமாக கட்டிக் காப்பாற்றி, எங்களிடத்தில் ஒப்படைத்திருக்கிறீர்களே... அப்படிப்பட்ட உங்களுக்காக நாங்கள் விழா எடுக்கிறோம்.

 கலைஞரின் மூச்சுக்காற்று எப்போதும் உலவுகிற மண் இந்தத் திருவாரூர் மண். அதனால்தான், கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலிலே தமிழகத்திலே பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்திருக்கிறீர்கள். இந்த மண்ணில் நாம் கூடியிருக்கிறோம். உங்களை வாழ்த்துவதற்கில்லை. பெரியார், அண்ணா, பாரதிதாசன் வாழ்த்திய பிறகு நாங்கள் என்ன வாழ்த்துச் சொல்வது, உங்களிடமிருந்து வாழ்த்துப் பெறுவதற்குக் கூடியிருக்கிறோம். 

2016 -ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், 6-வது முறையாக முதலமைச்சராகக் கலைஞர் பதவியேற்றிருந்தால், ஜூன் 12 -ம் தேதி காவிரி நீர் வந்திருக்கும். கர்நாடகத்தில் யார் முதலமைச்சராக இருந்தாலும், அவரை நட்பு ரீதியாகச் சந்தித்து நீர் பெற்றுத்தந்தவர் கலைஞர். காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டிருப்பதாக துரைமுருகன் சொன்னார். ஆனால், ஜூன் 12 -ம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லையென்றால், அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, மிகப்பெரிய போராட்டத்தை நடத்தவேண்டி வரும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த ஏழாண்டுக் கால ஆட்சியில், ஒரு முறையாவது ஜூன் 12 -ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருக்கிறதா என்றால் இல்லை. 

ஸ்டாலின்

உலக வரைபடத்தில் உள்ள ஒரு நாடுகூட விடாமல் உலகம் சுற்றும் பிரதமர் மோடியையே சென்னையிலே விரட்டி அடித்திருப்பவர்கள் நாங்கள். அண்ணாவிடம் கலைஞர் இதயத்தை இரவலாகக் கேட்டார். நான் கலைஞரிடம் உங்கள் சக்தியில் பாதியைக் கொடுங்கள் எனக் கேட்கிறேன். மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்துகொண்டிருக்கும் நாசகார, கொலைகார ஆட்சியை,  ஊழல் மலிந்திருக்கும் இந்த அரசுகளை வீட்டுக்கு அனுப்பக்கூடிய போருக்கு நாங்கள் தயாராகிக்கொண்டிருக்கிறோம். அப்போரிலே வெற்றிபெற வேண்டுமென்றால், உங்கள் சக்தியில் பாதியைத் தாருங்கள். பாசிச அரசுகளை வீழ்த்தி, அதன் வெற்றியை இதே திருவாரூர் மண்ணில் உங்களுடன் கொண்டாடுவோம்.

நாளை, அறிவாலயத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்க இருக்கிறது. இங்கு பேசிய தலைவர்களெல்லாம் சட்டப்பேரவைகுறித்துப் பேசினார்கள். தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டிருக்கும் பிரச்னையை கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மூலமாக கொண்டுவந்தால், 'ஏற்கெனவே மூன்று பேர் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். எனவே, நீங்கள் கொடுத்த ஒத்துழைப்புத் தீர்மானத்திலே பேச வாய்ப்பில்லை' என்று மறுக்கப்படுகிறது,  மீறி நாங்கள் பேசுகிறோம். 

ஏற்கெனவே, கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு ஒரு விவர அறிக்கையை முதலமைச்சர் சார்பிலே, சட்டமன்றத்திலே சமர்ப்பித்திருக்கிறார்கள். அதில் சூழலை விளக்கியுள்ளார்கள். அதில் துப்பாக்கிச் சூடு, படுகொலை என்ற வார்த்தையே இல்லை. எத்தனை பேர் இறந்தார்கள் என்கிற விவரம் கூட கிடையாது. இதையெல்லாம் சுட்டிக்காட்டிப் பேசுகையில், அவைக் குறிப்பிலிருந்து நீக்குகிறார்கள். ஜனநாயக மாண்பு காக்கப்படுகிறதா?  பட்ஜெட் கூட்டத் தொடர் இது. இப்போது மானியக் கோரிக்கை நடைபெற்றுவருகிறது. 2 முறை கூட்டத் தொடரிலிருந்து வெளியேற்றிவிட்டால், மூன்றாம் முறை உள்ளே வர முடியாது. இதற்குத்தான் அவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். 

ஸ்டாலின்

சட்டமன்ற உறுப்பினர் 18 பேரின் வழக்கு உச்ச நீதிமன்றத்திலே இருக்கிறது. விரைவில் அதன் தீர்ப்பு வர இருக்கிறது. வருகிறபோது, சட்டமன்றத்தில் நம்பிக்கைத் தீர்மானத்தை நிறைவேற்றிட வேண்டும்.  புத்திசாலித்தனமாக நாடகமாடுகிறார்கள். ஏதாவது, சின்ன பிரச்னையை வைத்து எங்களைக் கூண்டோடு வெளியேற்றக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். 

தோழமைக் கட்சிகளாகிய நீங்கள் கோரிக்கை வைத்திருக்கிறீர்கள், நான் கலைஞரின் மகன்.  கலைஞர் யோசித்து, சிந்தித்து, ஆலோசித்துத் தான்  முடிவெடுப்பார். அவரளவு இல்லையென்றாலும், அவரிடமிருந்து இம்மியளவாவது எனக்கு இருக்கிறது. அந்த உணர்வோடு, இங்கு தோழமைக் கட்சிகள் எடுத்துவைத்திருக்கக்கூடிய கருத்துகளை எல்லாம் நாளை நடைபெற உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலே பேசி, கலந்து ஆலோசித்து, நீங்களெல்லாம் திருப்திப்படக்கூடிய நல்ல முடிவை நாங்கள் எடுப்போம்” என்று முடித்துக்கொண்டார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க