வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (02/06/2018)

கடைசி தொடர்பு:07:49 (02/06/2018)

``ஆவின் ஊழல் வழக்கில் சி.பி.ஐ விசாரணை வேண்டும்” - பால் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை

ஆவின்

‘ஆவின் பால் கலப்பட ஊழல் வழக்கில் கைதான வைத்தியநாதன் மீது ஆவின் நிர்வாகம் மேல் முறையீடுசெய்ய வேண்டும். மேலும், இந்த வழக்கை சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்’ என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

பால் உற்பத்தியாளர்கள் சந்தித்துவரும் பிரச்னைகள் மற்றும்  நிலுவையில் உள்ள கோரிக்கைகள் போன்றவற்றை ஆலோசிக்கும் விதமாக ‘தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின்’ மாநிலக் குழுக்கூட்டம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின்போது, பாலின் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும், கால்நடைத் தீவனங்களை மானிய விலையில் வழங்கிட வேண்டும் என்பது போன்ற 9 தீர்மானங்களை இயற்றினர்.

கூட்டத்தின்போது நிர்வாகிகள் பேசுகையில், “ஆவின் தீவனம் 50 கிலோ மூட்டை 600 ரூபாய்க்கு விற்றது, தற்போது 930 ரூபாய் ஆகியிருக்கிறது. 50 சதவிகிதத்திற்கும் மேலாக தீவனத்தின் விலை உயர்ந்திருக்கிறது. இதைப்போலவே இதர அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயர்ந்திருக்கிறது. ஆனால், பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு மறுக்கிறது. இது வஞ்சிக்கும் செயல். ஆகவே, தமிழக அரசு, பாலுக்கான கொள்முதல் விலையைப் பசும்பாலுக்கு 35 ரூபாய் எனவும், எருமைப்பாலுக்கு 45 ரூபாய் எனவும் உடனடியாக உயர்த்தி அறிவிக்க வேண்டும். அதேபோல, 50 சதவிகித மானிய விலையில் ஆவின் தீவனத்தை வழங்க வேண்டும். 

மேலும், தனியார் பால் நிறுவனங்கள் தங்களுடைய கொள்முதல் விலையை 3 ரூபாய் வரை குறைத்திருக்கிறார்கள். தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு, தனியார் பால் நிறுவனங்களின் இந்த பால் கொள்முதல் விலைக்குறைவைத் தடுக்க வேண்டும். தினமும் 50 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்ய வேண்டும். தட்டுப்பாடில்லாமல் கால்நடை மருந்து கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மேலும், ஆவின் பால் கலப்பட ஊழல் வழக்கில் கைதான வைத்தியநாதன் மீது, ஆவின் நிர்வாகம் மேல்முறையீடு செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல், ஆவின் ஊழல் வழக்கில் உண்மையைக் கொண்டுவர சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்றனர்.