வேல்முருகன் மீதான கைது நடவடிக்கைக்கு கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!

தூத்துக்குடியில், தொடரும் கைது நடவடிக்கைகளைத் தமிழக அரசு நிறுத்த வேண்டுமென்று கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

கே.பாலகிருஷ்ணன்

இது சம்பந்தமாக மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், "தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென அப்பகுதி மக்கள் பல மாதமாகப் போராடி வந்தனர். தமிழக அரசு, போராடியவர்களை அடக்க துப்பாக்கிச் சூட்டை நடத்தி 13 பேர் உயிரைப் பறித்தது. நூற்றுக்கணக்கானோர் தடியடி மற்றும் குண்டு காயங்களால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

இந்நிலையில், தமிழக அரசு தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பி வருவதாகக் கூறிக்கொண்டே, மறுபுறம் போராட்டத்தில் கலந்து கொண்ட அப்பாவி பொது மக்களையும், இளைஞர்களையும் இரவோடு இரவாக வீடு வீடாகச் சென்று மிரட்டியும், பயமுறுத்தியும், கைது செய்துவருகிறது. தமிழக அரசின் இந்தப் பழிவாங்கும் நடவடிக்கையால், தூத்துக்குடியில்  மீண்டும் பதற்றநிலை உருவாக்கப்படுகிறது.  பழிவாங்கும் வகையில் நடத்தப்படும் கைதுப் படலத்தை உடனடியாக நிறுத்திட வேண்டுமெனவும், தூத்துக்குடியில் இயல்புநிலை திரும்ப தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல்துறையும், தமிழக அரசும் உரிய கவனம் செலுத்த வேண்டுமென  வற்புறுத்துகிறோம்.

அது மட்டுமில்லாமல், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன்,  தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்ததற்காக  மே 26 -ம் தேதி சிறையிலடைக்கப்பட்டார். அங்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதால்,  உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்தார். இந்நிலையில், நேற்று தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அரசின் இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம். வேல்முருகனை உடனடியாக விடுதலைசெய்ய வேண்டுமென  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநில செயற்குழு தமிழக அரசை வற்புறுத்துகிறது" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!