வெளியிடப்பட்ட நேரம்: 11:34 (02/06/2018)

கடைசி தொடர்பு:19:04 (04/06/2018)

`இப்போதைக்கு எதுவும் பேச வேண்டாம்!' - ஆலோசகரிடம் `கறார்' காட்டிய ரஜினி

`தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பிரச்னைகளைத் தொகுத்துவருகிறார் ரஜினிகாந்த். வரும் டிசம்பர் மாதம் அவர் எடுக்கப்போகும் நடவடிக்கைகள், அரசியல் களத்தை அதிர வைக்கும்' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 

ரஜினிகாந்த்

தூத்துக்குடியில் நடந்த சம்பவத்தை அடுத்து, அரசியல்ரீதியாக அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்திவருகிறார், நடிகர் ரஜினிகாந்த். ' தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பிரச்னைகளைத் தொகுத்துவருகிறார். வரும் டிசம்பர் மாதம் அவர் எடுக்கப்போகும் நடவடிக்கைகள், அரசியல் களத்தை அதிரவைக்கும்' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 

அரசியல் பிரவேசம்குறித்து கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தார் நடிகர் ரஜினிகாந்த். ஆனால், இன்று வரை புதிய கட்சியின் பெயரையோ சின்னத்தையோ அவர் அறிவிக்கவில்லை. ஐபிஎல் போராட்டத்தின்போது, போலீஸ்காரர்களைத் தாக்கியவர்களைக் கடுமையாகக் கண்டித்தார். நாம் தமிழர் கட்சித் தொண்டர்களைக் குறிவைத்து ரஜினியின் ட்வீட் இருந்ததால், அதைக் கண்டித்த சீமான், ' நடந்த சம்பவம் என்னவென்று பாரதிராஜாவிடம் கேட்டுவிட்டு, ரஜினி ட்வீட் போட்டிருக்க வேண்டும்' எனக் கொதித்தார். இந்நிலையில், ஸ்டெர்லைட் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களை கடந்த புதன்கிழமை சென்று சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த். அங்கு, பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர், ' யார் நீங்க?' என ரஜினியிடம் கேள்வி எழுப்பியது வைரல் ஆனது. இதுகுறித்து வீடியோ ஒன்றில் விளக்கம் அளித்த அந்த இளைஞர், ' நான் கேட்ட கேள்வியின் அர்த்தம் மாறிப் போய்விட்டது. நானும் ரஜினி ரசிகன்தான்' எனப் பேசியிருந்தார். அதேநேரம், சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் ரஜினி ஒருமையில் பேசியதும், அடுத்தகட்ட சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதையடுத்து, போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் அரசியல் ஆலோசகர்களிடம் தீவிர விவாதம் நடத்தியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். இதுகுறித்து நம்மிடம் பேசிய ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி ஒருவர், " ஒவ்வொரு மாவட்டத்திலும் நடக்கும் பிரச்னைகளை உன்னிப்பாகக் கவனித்துவருகிறார் ரஜினி. மாவட்டம்தோறும் உள்ள பிரச்னைகளைப் புள்ளிவிவரத்துடன் சேகரித்து வைத்திருக்கிறார். தூத்துக்குடியில் நடந்த சம்பவம், அவருக்குள் வேதனையை ஏற்படுத்திவிட்டது. நேற்று அவரிடம் பேசிய அரசியல் ஆலோசகர் ஒருவர், ' ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான கலவரத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையாளும் முறை சரியானதாக இல்லை. இந்தக் கலவரத்தைக் கண்டித்து, மாநிலம் முழுவதும் எதிர்க்கட்சிகள் பந்த் நடத்தின. அது எந்தவித விவாதத்தையும் ஏற்படுத்தவில்லை. தூத்துக்குடி விவகாரம் முக்கியமானதுதான், இல்லையென்று சொல்லவில்லை. அதேநேரம், சிவகங்கை மாவட்டம் கச்சநத்தத்தில் ஒரு பயங்கர சம்பவம் நடந்திருக்கிறது. இந்த நூற்றாண்டில்  இப்படியொரு சமூக அவலம் நடந்திருக்கிறது. இதைப் பற்றி ஸ்டாலின் எந்தக் கருத்தையும் சொல்லவில்லை. திராவிட மண், பெரியார் மண் என்றெல்லாம் பேசுகிறார்கள். அப்படியிருந்தும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? அண்டை மாநிலமான கேரளாவிலும் கர்நாடகாவிலும்கூட இப்படியெல்லாம் நடப்பதில்லை. தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இவ்வளவு நாள் ஆட்சிசெய்து, இவர்கள் என்ன சாதித்துவிட்டார்கள்?' என அவர் கூறியதை ஆமோதித்துக் கேட்டுக்கொண்டிருந்தார் ரஜினி. 

ரஜினிகாந்த்

தொடர்ந்து பேசிய ஆலோசகர், ' இப்போதும், பாதிக்கப்பட்டவர்களையும் பலமானவர்களையும் இந்தக் கட்சிகள் ஒன்றாகத்தான் நினைக்கின்றன. இவர்கள்தான் அனைத்து விவகாரங்களிலும் அரசியல் செய்கிறார்கள். பா.ஜ.க-வை மட்டும் இந்துத்துவக் கட்சி எனப் பிரசாரம் செய்கிறார்கள். தமிழ்நாட்டில் 3 சதவிகித ஓட்டுகூட பா.ஜ.க-வுக்கு இல்லை. இவர்களை மையப்படுத்தியா மக்கள் ஓட்டுப் போடுகிறார்கள்? தமிழக மக்களுக்கு என்ன தேவை என்பதை நீங்கள் (ரஜினி) அறிந்து வைத்திருக்கிறீர்கள். எளிதான வெற்றியைக்கூட பெற முடியாதவராக ஸ்டாலின் இருக்கிறார். நுணுக்கமான அரசியல் வியூகங்களை அவர் அறிந்து வைத்திருக்கவில்லை. அப்படி இருந்திருந்தால், 2016 தேர்தலிலேயே அவர் வெற்றிபெற்றிருப்பார். அவரை நாம் எளிதாக வீழ்த்திவிடலாம். இப்போது அவர் நடத்தும் மாதிரி சட்டமன்றக் கூட்டம் எந்த விளைவையும் ஏற்படுத்தப்போவதில்லை. களத்தில் ஸ்டாலினைவிட நாம் முன்னோக்கிச் செல்வோம்' எனக் கூற, இதற்குப் பதில் அளித்த ரஜினி, ' அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. நாம் நிதானமாகத்தான் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டும்' எனக் கூறினார். இதன்பிறகு அரசியல் கட்சி தொடங்குவது சம்பந்தமான பூர்வாங்கப் பணிகள்குறித்து இருவரும் தீவிரமாக விவாதித்துள்ளனர்" என்றார் விரிவாக. 

"வரும் டிசம்பருக்குள் புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவிப்பதற்கான பணிகளில் தீவிரமாக இருக்கிறார் ரஜினி. ஸ்டெர்லைட் விவகாரத்தில், கடந்த 25 ஆண்டுகளாக இரண்டு திராவிடக் கட்சிகளும் என்ன செய்தன என்ற முழு விவரத்தையும் அவர் சேகரித்து வைத்திருக்கிறார். ஒவ்வொரு பிரச்னையிலும் திராவிடக் கட்சிகள் என்ன நிலைப்பாடு எடுத்தன என்பதையும் தொகுத்துவைத்திருக்கிறார். விரைவில் அரசியல் கட்சியைத் தொடங்கவிருப்பதால், 'இப்போதைக்கு எதுவும் பேச வேண்டாம்' என்ற மனநிலைக்கு வந்துவிட்டார். அரசியல் கட்சியின் பெயரை அதிகாரபூர்வமாக அறிவிக்கும்போது, தமிழக அரசியல் களம் நிச்சயம் அதிரும்" என்கின்றனர், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்.