இந்தியாவுக்காக உருவாகிறது... சிறிய ஜீப் | Jeeps's new small SUV coming to India

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (02/06/2018)

கடைசி தொடர்பு:13:40 (02/06/2018)

இந்தியாவுக்காக உருவாகிறது... சிறிய ஜீப்

ஃபியட் கிரைஸ்லர் குழுமத்தின் செல்லப்பிள்ளையான ஜீப் நிறுவனத்தின் 4 மீட்டருக்குக் குறைவான சிறிய எஸ்யூவி, சீக்கிரமே வரப்போகிறது. இந்நிறுவனத்தின் அடுத்த 5 ஆண்டு பிளான் என்னவென்று அறிவித்த ஃபியட்டின் மேலாளர் மைக் மேன்லி, இந்தியாவுக்கு வரப்போகும் எஸ்யூவியைப் பற்றியும் கூறியுள்ளார்.

ஜீப்

தற்போது, ஜீப் ரெனகாடேவை டெஸ்ட் செய்துகொண்டிருக்கும் இந்நிறுவனம், ரெனகாடேவைப் போலவே, 4 மீட்டர் நீளத்துக்குக் குறைவான சிறிய எஸ்யூவி-யைப் புதிதாக வடிவமைக்கப்போகிறதாம். ஃபியட் 500 காரின் பிளாட்ஃபார்மையும், ஃபியட் பான்டா 4 x4 காரின் பாடி மற்றும் பாகங்களைக்கொண்டிருக்கும் இந்த கார். ஜீப் நிறுவனத்தில் உருவாவதால், மற்ற ஜீப் கார்களைப் போல ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற காராகவே தயாரிக்கப்படும். 

இந்தியாவில், 4 மீட்டருக்குக் குறைவான கார்களுக்கு வரி குறைவு என்பதால், இந்தக் கார்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. எஸ்யூவி செக்மென்ட்டும் இந்தியாவில் அசுர வேகத்தில் வளர்கிறது. கடந்த ஆண்டு மட்டும் 9,21,780 புதிய எஸ்யூவி கார்கள் வாங்கப்பட்டுள்ளதாம். இந்தச் சந்தை விவரங்களை மனதில் வைத்துதான் இந்தியாவுக்கு சிறிய எஸ்யூவியைக் கொண்டுவர முடிவெடுத்துள்ளார்களாம். 

ஜீப் காம்பஸ்

இந்நிறுவனம், சிறிய எஸ்யூவி தவிர 3 வரிசை சீட் கொண்ட மிட் சைஸ் எஸ்யூவி ஒன்றையும் இந்தியாவுக்குக் கொண்டுவரப்போவதாகக் கூறியுள்ளார்கள். இந்த ஐந்தாண்டு பிளானில், இந்தியாவில் உள்ள ஃபியட் தொழிற்சாலையை விரிவுபடுத்தி, உற்பத்தியை 1,60,000 யூனிட்டிலிருந்து 2,40,000 யூனிட் வரை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளார்கள். இதன்மூலம், இந்தியாவில் இருந்து ஃபியட் ஏற்றுமதியை அதிகரிக்கப்போவதாகவும் கூறியுள்ளார்கள். டீலர்கள் மற்றும் சர்வீஸ் சென்டர்களையும் அதிகமாக்கப்போகிறதாம். இனி, இந்தியாவிலும் நிறைய இத்தாலிய கார்களைப் பார்க்கலாம்.