ரஜினிகாந்த்துக்கு கோரிக்கை வைக்கும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி!

“ஸ்டெர்லைட் விவகாரத்தில், ரஜினிகாந்த் அவரது கருத்தை திரும்பப் பெற வேண்டும்” என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருக்கிறார்.

நாராயணசாமி

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, ``காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பாக மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நீண்டகாலப் போராட்டத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி இது. இதனால், காரைக்கால் மாவட்ட விவசாயிகளுக்கு காவிரி நீர் உரிய நேரத்தில் கிடைக்கும். மதச்சார்பற்ற அணிகளை ஒன்றிணைக்கும் வேலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி ஈடுபட்டுவருகிறார். 2019-ம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், மதச்சார்பற்ற அணியின் தலைமையிலான ஆட்சி மத்தியில் அமையும். ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். அது கண்டிக்கத்தக்கது. ஸ்டெர்லைட் விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த்தின் கருத்து ஏற்புடையதல்ல. அவருடைய கருத்து அப்பகுதி மக்களின் மனதைப் புண்படுத்தியுள்ளது.

எந்தவொரு விஷயத்திலும் முழுவதுமாகத் தெரியாமல் கருத்து கூறக் கூடாது. தூத்துக்குடிக்குச் சென்ற ரஜினிகாந்த் அங்கு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், போராட்டத்தில் தேசவிரோத சக்திகள் நுழைந்து கலவரத்தை ஏற்படுத்தியதாக மாறுபட்ட கருத்தைத் தெரிவித்திருக்கிறார். அந்தக் கருத்து ஏற்புடையது அல்ல. அவரது கருத்து, அப்பகுதி மக்களின் மனநிலையைப் புண்படுத்தியுள்ளது. அதனால், ரஜினிகாந்த் பெருந்தன்மை உடையவராக இருந்தால், தன்னுடைய கருத்தை அவர் திரும்பப் பெற வேண்டும். மக்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதை ஏற்க முடியாது. போராட்டத்தில் சமூக விரோதிகள் ஈடுபட்ட ஆதாரம் இருந்தால், அதை அவர் மக்கள் மத்தியில் தெரிவிக்க வேண்டும். ஆதாரமில்லாமல் அவர் பேசுவதிலிருந்தே அவரை பின்னாலிருந்து யாரோ இயக்குவது தெளிவாகிறது” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!