தமிழிசைக்கு எதிராக வாட்ஸ்அப் வீடியோ வெளியிட்ட பெண்மீது வழக்கு!

ஸ்டெர்லைட்  ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு 13 பேர் பலியான சம்பவத்துக்குப் பிறகு, பல்வேறு விதமான சர்ச்சைகள் பூதாகரமாகிவருகின்றன. இந்நிலையில், 100 நாள் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதால்தான் துப்பாக்கிச் சூடு நடந்ததாக,  தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தொடர்ந்து கூறிவருகிறார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பெண் ஒருவர் தமிழிசைக்கு எதிராகப்  பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்தப் பதிவு, கடந்த சில நாள்களாக வாட்ஸ்அப் மற்றும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

தமிழிசை

தமிழிசையை மோசமாகப் பேசிய பெண், திருச்சி மாவட்டம் மணப்பாறை காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த சூர்யா ஆரோ என்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பெண்மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, பி.ஜே.பி புறநகர் மாவட்டத் தலைவர் மனோகர் ராஜன், மணப்பாறை ஒன்றியத் தலைவர் சித்தாநத்தம் சுப்ரமணி ஆகியோர், மணப்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கென்னடியிடம் புகார் கொடுத்தனர். இதேபோல, பா.ஜ.க மாநிலச் செயலாளர் அனு சந்திரமவுலி, இணை பொறுப்பாளர்கள் ஜெய்சங்கர், காளிதாஸ் மற்றும் நிர்வாகிகள் டால்பின் யமிதார் லோகநாதன்  ஆகியோர், டி.ஜி.பி அலுவலகத்தில் டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரனை நேற்று சந்தித்தனர். இதையடுத்து, தமிழிசை சௌந்தரராஜன் பற்றி அவதூறாகப் பேசிய மணப்பாறை பகுதியைச் சேர்ந்த பெண்மீது ஆபாசமாகப் பேசுதல், அவதூறு பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுசெய்து, போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில், சூர்யா ஆரோ குடியிருக்கும் வீடு சில தினங்களாக பூட்டிக் கிடப்பதாகவும், அந்தப் பெண்ணைத் தேடி பி.ஜே.பி நிர்வாகிகள் மிரட்டும் தொனியில் அப்பகுதியில் வலம்வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டிவருகின்றனர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!