வெளியிடப்பட்ட நேரம்: 14:58 (02/06/2018)

கடைசி தொடர்பு:15:12 (02/06/2018)

ஜெயலலிதா சிங்கிளாகப் போனார்... ஸ்டாலின் கூட்டமாகக்கூட போக மறுக்கிறார்!

2006 மே மாதத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருந்தன. எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

ஜெயலலிதா சிங்கிளாகப் போனார்... ஸ்டாலின் கூட்டமாகக்கூட போக மறுக்கிறார்!

2006 மே மாதத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருந்தன. எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. அதிக இடங்களில் வென்ற தி.மு.க., கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியை அமைத்தது. எதிர்க்கட்சித் தலைவராக வந்து அமர்ந்தார் ஜெயலலிதா. புதிய எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்புடன் முதல் சட்டசபைக் கூட்டத் தொடர் தொடங்கிய சில நாள்களிலேயே அமளி. அ.தி.மு.க. உறுப்பினர்கள் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். ``சட்டசபைக்குப் போய் கேள்வி எழுப்புவேன்'' என அதிரடியாக அறிவித்தார் ஜெயலலிதா. 

சட்டசபை

2006 மே மாதம் 27-ம் தேதி அந்த அதிசயம் அரங்கேறியது. சிங்கிள் ஆளாக அவைக்குப்போன எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா, முதல்வர் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆகியோரின் குறுக்கீடுகளோடு ஒன்றரை மணி நேரம் விவாதத்தில் பங்கேற்றார். இந்தச் சம்பவம் நடந்து, கடந்த மே 27-ம் தேதியோடு 12 வருடங்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில், சட்டசபைக் கூட்டத்தொடரைப் புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். 

பட்ஜெட் மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக மே 29-ம் தேதி சட்டசபை கூடியது. ஸ்டெர்லைட் விவகாரத்தால் முதல்நாளே அமளியில் தொடங்க... கூட்டத்தொடரைப் புறக்கணிப்பதாக அறிவித்தது தி.மு.க. அடுத்த நாள் அறிவாலயத்தில் மாதிரிச் சட்டசபையை நடத்தியிருக்கிறார்கள். ஜூலை 9-ந் தேதி வரை 23 நாள்கள் நடைபெறும் இந்தக் கூட்டத் தொடரில், எந்த எதிர்ப்புகளும் இல்லாமல், ஆலோசனைகள் அளிக்கப்படாமல், மானியக் கோரிக்கைகள் நிறைவேறப் போகின்றன. ஸ்டெர்லைட் உள்ளிட்ட மக்கள் பிரச்னைகளை 23 நாள்களும் சட்டமன்றத்தின் கவனத்தை ஈர்க்கும் வாய்ப்பைப் புறந்தள்ளிவிட்டது தி.மு.க.  

தன் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டப் பிறகு, தனி ஆளாக அவைக்குச்சென்று கடமை ஆற்றிய, எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவின் துணிச்சல்கூட அதே இருக்கையில் இப்போது அமர்ந்திருக்கும் ஸ்டாலினுக்கு இல்லாமல் போனது ஏன்? கட்சித் தொடங்கி ஒரு கவுன்சிலர் தேர்தலைக்கூட எதிர்கொள்ளாத கமல்கூட சட்டசபைக்காகக் களமிறங்குகிறார். ``சட்டசபையில் கேள்வி கேட்க எதிர்க்கட்சிகள் இல்லை என மெத்தனம் வேண்டாம் நாங்கள் இருக்கிறோம்'' எனக் கமல் முன்னுக்கு வருகிறார். 

மக்கள் நீதி மய்யத்தின் விசில் செயலி மூலம் மக்களிடம் கருத்துகளைப் பெற்று, அரசுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறார். மானியக் கோரிக்கை விவாதம் தொடங்கிய நிலையில், விசில் செயலியின் மூலம் கிடைக்கப்பெற்ற கேள்விகளையும் தகவல்களை ஒரு பொறுப்பான அரசியல் கட்சியாக அரசு மற்றும் எம்.எல்.ஏ-க்களின் பார்வைக்குத் தினமும் அனுப்பிக்கொண்டிருக்கிறது மக்கள் நீதி மய்யம். சட்டசபைக்கு வெளியே இப்படிக் கட்சிகள் கடமையாற்றிக்கொண்டிருக்க... தி.மு.க.-வோ புறக்கணிப்பை நடத்திக்கொண்டிருக்கிறது. சுட்டிசபைகளாகத்தான் இருக்கிறது தி.மு.க. நடத்தும் போட்டி சட்டசபை. 

ஸ்டாலின்

ஜனநாயகம் என்கிற சொல்லுக்கு அடையாளமாக இருப்பவை நாடாளுமன்றமும் சட்டமன்றங்களும்தாம். சட்டமன்ற மரபுகளும் நெறிமுறைகளும் ஆளும் கட்சிகளால் ஆண்டாண்டுகாலமாக நெறிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில் எதிர்க்கட்சிகளும் கடமையாற்றாமல் போனால், ஜனநாயகத்தின் ஆணி வேர் அல்ல. சல்லி வேரே சிதைந்து போகும். ``சட்டம் இயற்றும் மன்றங்களில் ஆளும் கட்சி காதுகளாகவும் எதிர்க்கட்சி வாயாகவும் இருக்க வேண்டும்'' எனச் சொன்னான் ஓர் அறிஞன். ஆனால், எதிர்க்கட்சியான தி.மு.க. வாய் பேசாமல் ஊமையாகி நிற்கிறது. ஜனநாயகத்தைச் சாகடிப்பதில் ஆளும்கட்சிதான் ரோல் வகிக்கும். `சட்டசபைப் புறக்கணிப்பு' போன்ற விஷயங்களால் எதிர்க்கட்சிக்கும் இதில் பங்கு உண்டு. 

`நாடாளுமன்ற மாநிலங்களவை ஆண்டுக்கு நூறு நாள்களும் மக்களவை 120 நாள்களும் மாநிலச் சட்டசபைகள் 90 நாள்களும் நடத்தப்பட வேண்டும்' எனப் பரிந்துரைத்தது இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை மறுசீராய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதியரசர் நாராயண ராவ் கமிட்டி. ஆனால், தமிழகச் சட்டசபை ஆண்டுக்கு 40 நாள்கள்கூட கூடுவதில்லை. அப்படிக் கூடிய நாள்களிலும் `முதல்வர் போற்றி... எதிர்க்கட்சி தூற்றி' தான் கேட்கின்றன. கூடும் சொற்ப நாள்களில்கூட ``அவைக்கு வரமாட்டோம்'' என்றால் எதற்காக அவர்களுக்கு மக்கள் வாக்களித்தார்கள். 2004-ம் ஆண்டில் வெறும் 16 நாள்கள்தாம் சட்டமன்றமே நடந்திருக்கிறது. அப்போது நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்காகச் சட்டசபையின் ஆயுளையே குறைத்தது அன்றைய அ.தி.மு.க அரசு. அதனால், ஒட்டுமொத்த மானியக் கோரிக்கைகள் அனைத்தும் விவாதமே இல்லாமல் ஒரே நாளில் நிறைவேற்றிய கொடுமையும் அரங்கேறியது. அதனைக் கண்டித்து அன்றைக்கு அறிக்கைவிட்ட கருணாநிதி, ``இது ஜனநாயகத்துக்குக் கேடு'' என்றார். அவர் பிள்ளை ஸ்டாலினோ அதே மானியக் கோரிக்கை விவாதத்தையே மொத்தமாகப் புறக்கணித்திருக்கிறார். 

சட்டசபை

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டப் பிறகு, துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறும். ஒவ்வொரு துறையிலும் எவ்வளவு நிதி ஒதுக்கீடு, துறை சார்பான திட்டங்கள், புதிய அறிவிப்புகள் எல்லாம் மானியக் கோரிக்கை விவாதத்தில் விவாதிக்கப்படும். இந்த விவாதத்தில் பங்கேற்கும் உறுப்பினர்கள் வெட்டுத் தீர்மானங்களை அளிப்பார்கள். துறையில் இன்னென்ன திட்டங்களைக் கொண்டு வரலாம், கடந்த காலங்களில் அறிவித்த திட்டங்களில் எவையெல்லாம் கிடப்பில் உள்ளன, திட்டத்தின் குளறுபடிகள்,  ஊழல்கள் என மானியக் கோரிக்கையில் அரசின் கவனத்தை ஈர்க்க முடியும். அத்தனை வாய்ப்புகளையும் வாறிக்கொடுத்துவிட்டு, நிற்கிறது தி.மு.க. எதிர்க்கட்சிகளே இல்லாததால் அந்தத் துறையின் சார்பில் நடந்த திட்டங்கள் என்னென்ன? கிடப்பில் போடப்பட்ட பணிகள், துறையின் மெத்தனம் என எதுவுமே சட்டமன்றத்தில் எடுத்துவைக்க முடியாத அளவுக்கு ஆளும்கட்சிக்குச் சாதகமாக எதிர்க்கட்சி நடந்துவிட்டது. சட்டசபையின் எதிர்க்கட்சி இருக்கைகள் காலியாகக் கிடக்க... காற்றோடு கத்திச் சண்டை போட்டு வருகிறது ஆளும் கட்சி.   

``சட்டசபைப் புறக்கணிப்பைக் கைவிட வேண்டும்'' எனப் புதிதாகச் சட்டசபைக்குள் நுழைந்த டி.டி.வி. தினகரன்கூட குரல் கொடுத்திருக்கிறார். 1991-1996 ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் எதிர்க்கட்சி காங்கிரஸ். ஆனால், பரிதி இளம்வழுதி என்ற ஒற்றை உறுப்பினரை வைத்துக்கொண்டு, வாள் சுழற்றிய தி.மு.க. இப்போது சாட்டையைக்கூட சுழற்றவில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்