குப்பைக் காடாக மாறும் சோலைக்காடு... இது கோவை அவலம்..!

கோவையில் உள்ள சோலைக்காட்டை, குப்பைக் காடாக மாற்ற முயற்சி நடந்துவருகிறது.

கோவையில் உள்ள சோலைக்காட்டை, குப்பைக் காடாக மாற்ற முயற்சி நடந்துவருகிறது.

சோலைக்காடு

தேசிய நெடுஞ்சாலைகளில் 1 மரம் வெட்டப்பட்டால், அதற்கு ஈடாக 10 மரங்கள் நடப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், இந்த விதிமுறைகள் பெரும்பாலான இடங்களில் பின்பற்றபடவில்லை.  கோவையில் இப்படி வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக, மரங்கள் நடப்பட வேண்டும் என்று ம.தி.மு.க-வின் மாநில இளைஞரணிச் செயலாளர் ஈஸ்வரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதன்படி, கோவை அவினாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தி சாலை ஆகிய பகுதிகளில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் 10,000 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில், அவினாசி சாலை அருகே தேசிய நெடுஞ்சாலைக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் மட்டும் 5,000 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதனிடையே, அந்த இடத்தை குப்பைக் காடாக மாற்றும் முயற்சியில் நீலாம்பூர் ஊராட்சி ஈடுபட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து ம.தி.மு.க-வின் ஈஸ்வரன் கூறுகையில், “இங்கு முன்பகுதியில் வைக்கப்பட்டுள்ள மரங்கள் நன்றாக வளர்ந்துள்ளன. ஆனால், பின்பகுதியில் சரியான பராமரிப்பு இல்லாததால், மரங்கள் அந்த அளவுக்கு வளரவில்லை. எனவே, அந்த மரங்களையும் சரியாக வளர்க்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறையிடம் வலியுறுத்திவருகிறோம்.  இந்நிலையில், அந்த இடத்தை குப்பைக் காடாக ஆக்கும் முயற்சியாக, நீலாம்பூர் ஊராட்சி, குப்பையைக் கொட்டிவருகிறது. நீலாம்பூர் ஊராட்சியில், திடக்கழிவு மேலாண்மை பின்பற்றப்படுவதே இல்லை. இதுகுறித்து, கோவை மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளிக்க உள்ளோம்” என்றார்.

குப்பைக்காடு

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறையிடம் விசாரித்தபோது, “நீலாம்பூர் ஊராட்சி நிர்வாகத்திடம் பேசியுள்ளோம். இனி, குப்பை கொட்ட மாட்டோம் எனக் கூறியுள்ளனர். மரங்களை நட்டுள்ள பகுதியில், தொடர்ந்து கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளோம்” என்றனர்.

நீலாம்பூர் ஊராட்சி நிர்வாகத்திடம் பேசினோம், “அங்கு குப்பை கொட்டுவதை நிறுத்த உத்தரவிட்டுள்ளோம்” என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!