`சினிமா வசனங்களைப் பேச வேண்டாம்’ - ரஜினியைச் சாடும் சுப்பிரமணியன் சுவாமி

``ரஜினியின் அரசியல் கருத்து பற்றி இப்போது கருத்து கூற முடியாது, சினிமாக்காரர்கள் அரசியலைவிட்டு சிறிது தள்ளி இருப்பது நல்லது'' என பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

சுப்பிரமணிய சுவாமி

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சென்றார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை அவர் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இதுவரை இருந்த தமிழக ஆளுநர்களிலேயே சிறந்தவர் பன்வாரிலால் புரோஹித்தான். அவர் வந்த பின் ஆளுநர் மாளிகையில் இருக்கும் பெருமளவு செலவுகளைக் குறைத்துவிட்டார். தூத்துக்குடியில் நடந்த கலவரத்துக்கு பயங்கரவாதிகள்தான் காரணமாக இருக்கலாம். விடுதலைப் புலிகளின் மிச்சமாக இருக்கலாம். மத்திய அரசால் அனுமதிக்கப்படாத என்.ஜி.ஓ-வாக இருக்கலாம். இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது நடந்த கலவரம்குறித்தும் விசாரணை நடந்துவருகிறது. எதுவும், முழுமையான விசாரணை முடிந்த பின்னரே கருத்து கூற முடியும்.

அரசியல் பற்றி ரஜினி கூறும் கருத்துகளுக்கு இப்போது நான் பதிலளிக்க முடியாது. என்ன செய்கிறார் என்று ஒரு வருடம் பொறுத்திருந்து பார்ப்போம். சினிமா வசனங்களை ரஜினி பேச வேண்டாம். நான் அரசியல்வாதி. அவருடனான கூட்டணிகுறித்து செயற்குழுவில் எதுவும் பேசவில்லை. அப்படி கூட்டணிக்காக ரஜினி வந்தால், அதை அப்போது பார்த்துக்கொள்ளலாம். சினிமாக்காரர்கள் அரசியலைவிட்டு சற்று தள்ளி இருப்பது நல்லது” எனக் கூறினார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!