வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (02/06/2018)

கடைசி தொடர்பு:16:20 (02/06/2018)

"தமிழகத்தில் ராஜபக்சேவின் கைக்கூலிகள்"- பொன்.ராதாகிருஷ்ணன் புதிய தகவல்!

தமிழகத்தில், ராஜபக்சேவின் கைக்கூலிகள் செயல்படுவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தமிழகத்தில், ராஜபக்சேவின் கைக்கூலிகள் செயல்படுவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

பொன் ராதாகிருஷ்ணன்

பா.ஜ.க-வின் கோவை மாநகர மாவட்ட செயற்குழுக் கூட்டம் காந்திபுரத்தில் நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ் மொழியை வைத்து ஆட்சிக்கு வந்து துரோகம் செய்தவர்கள், பாசாங்கு, பசப்பு வேலை செய்யாமல், குறைந்தபட்சம் தமிழ்ப் படத்தையாவது திரையிட முயல வேண்டும். 150 ஆண்டுகளாக எந்த அரசாங்கத்தாலும் தீர்க்கப்படாத காவிரிப் பிரச்னைக்கு, காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கான கையெழுத்தைப் போட்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கும், விடிவைத் தந்திருக்கும் பிரதமருக்கும் தமிழக விவசாயிகள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆணையத்திற்குக் கட்டுப்பட்டு, கர்நாடக அரசாங்கம் செயல்பட வேண்டும் என்பதை சட்டமாகக் கொண்டுவருவதில் ஏதேனும் பிரச்னை வந்தால், காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ள தி.மு.க அதை தீர்க்கக்கூடிய இடத்தில் இருக்க வேண்டும்.

தமிழக வாழ்வுரிமை கட்சியின், வேல்முருகன் மீது போடப்பட்ட வழக்கில் தவறில்லை. பயங்கரவாத சக்திகளைத் தடுக்கத் தவறிய தமிழக அரசு, இனியாவது அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும். மற்றவர்களைபோல ஒப்புக்கு இல்லாமல், தூத்துக்குடி சம்பவத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர், பிரதமர் சார்பில் மன வேதனையுடன் இரங்கலைத் தெரிவித்துள்ளார். நாடகங்கள் மற்றும் சினிமாவால்தான் தி.மு.க வளர்ந்தது. தி.மு.க நடத்திய மாதிரி சட்டசபை, தமிழக மக்களை ஏமாற்றும் வேலை. தமிழகத்தில் எந்தத் தொழில் நிறுவனம் வந்தாலும், அதை எதிர்த்துப் போராட்டம் நடத்துகிறார்கள். ராஜபக்சேவின் கைக்கூலிகள் தமிழகத்தில் செயல்பட்டுவருகின்றனர். அவர்கள்தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வுமூலம் கிடைக்கும் வருமானத்தில் மட்டுமே, பல கோடிக்கணக்கான திட்டங்களை இந்த நான்கு ஆண்டுகளில் மத்திய அரசு செய்துள்ளது. பெட்ரோலியப் பொருள்களை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வர மத்திய அரசு முயன்றுவருகிறது. எஸ்.வி. சேகர் விவகாரத்தில் சட்டம் தன் கடமையைச் செய்யும்” என்றார்.