`கட்டாயக் கல்வியை ஊக்கப்படுத்தவில்லை!’ - அமைச்சர் செங்கோட்டையன் | 'The government did not encourage compulsory education!' - Minister sengottaiyan speaks...

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (02/06/2018)

கடைசி தொடர்பு:16:40 (02/06/2018)

`கட்டாயக் கல்வியை ஊக்கப்படுத்தவில்லை!’ - அமைச்சர் செங்கோட்டையன்

செங்கோட்டையன்

''கட்டாயக் கல்விச் சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் வழங்கப்படும் கல்வியைத் தமிழக அரசு ஊக்கப்படுத்தவில்லை. நாளை சட்டமன்றத்தில் இதுதொடர்பாக அரசின் நிலைப்பாட்டை விளக்க இருக்கிறோம்'' என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையத்தை அடுத்த குள்ளம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் கலை அரங்கம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.கே.காமராஜ் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், “தமிழகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர் இனிவரும் காலங்களில் மத்திய அரசு கொண்டுவரும் அனைத்து பொதுத் தேர்வுகளையும் சந்தித்து, அதில் சாதிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறையின் மூலமாகப் பல பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 12-ம் வகுப்பு முடிக்கும்போதே மாணவ, மாணவியருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிடும் வகையில் புதிய பாடத்திட்டமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தில் க்யூ ஆர் பார்கோடு மூலம் பாடத்திட்டங்களின் விளக்கங்கள் உள்ளிட்டவை மொபைல் மூலமாகத் தெரிந்துகொண்டு மாணவ, மாணவியர் எளிதில் கற்கும் வகையில் தலைசிறந்த கல்வியாளர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.

செங்கோட்டையன்

பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், “2 லட்சம் குழந்தைகள் ஸ்மார்ட் கிளாஸ் பயிற்சி பெற கணினி வழியில் புதிய முறையில் பாடம் கற்பிக்கப்படும். பள்ளிக்கு மாணவர்கள் சரியாக வருகை புரிகிறார்களா என்பது குறித்து பெற்றோர்களுக்கு செல்போன் மூலமாகத் தகவல் தெரிவிக்கப்படும். கட்டாயக் கல்விச் சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் வழங்கப்படும் கல்வியைத் தமிழக அரசு ஊக்கப்படுத்தவில்லை. நாளை சட்டமன்றத்தில் இதுதொடர்பாக அரசின் நிலைப்பாட்டை விளக்க இருக்கிறோம். விளாங்கோம்பை மலைப்பகுதி வனத்துறையின் செட்டில்மென்ட் பகுதியாக உள்ளது. அங்கு பள்ளிக்கூடம் அமைக்க வேண்டுமென மத்திய அரசுக்கு பரிந்துரைகளை அனுப்பியுள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் அங்கு புதிய பள்ளி தொடங்கப்படும்” என்றார்.