தூக்கத்தில் தீப்பிடித்த குடிசை வீடு... கண்விழித்த இளைஞருக்கு நடந்த கொடூரம்

தீ விபத்தில் பலியான மாற்றுத்திறனாளி இளைஞர்

 குடிசை வீட்டில் தீப்பற்றி எறிந்ததில் சிக்கிய மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் பலியான சம்பவம், ஈரோட்டில் சோகத்தை ஏற்படுத்தியது.

ஈரோடு மாவட்டம், கொடுமுடி தாலுக்கா வெங்கமேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர்கள், சண்முகம் - பாப்பாத்தி தம்பதி. கூலித் தொழிலாளியான சண்முகத்திற்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள். இவரது மூத்த மகன் பாண்டியன் (24) ஒரு மாற்றுத்திறனாளி. அதேபோல, சண்முகத்தின் மனைவி பாப்பாத்தி, சற்று மனநிலை சரியில்லாதவர். இருந்தாலும், கிடைத்த வருமானத்தைவைத்து குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், நேற்று காலை எல்லோரும் வேலைக்குச் சென்றுவிட மனநிலை சரியில்லாத தாய் பாப்பாத்தியும், மாற்றுத்திறனாளி மகன் பாண்டியன் மட்டும் வீட்டில் இருந்திருக்கின்றனர். மதியச் சாப்பாட்டை முடித்துவிட்டு சற்று அசந்து தூங்கியிருக்கிறார். அந்த நேரத்தில், டீ வாங்கி வருவதற்காக தாய் பாப்பாத்தி அருகிலிருந்த கடைக்குச் சென்றிருக்கிறார். அப்போது, திடீரென வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்திருக்கிறது. குடிசை வீடு என்பதால், தீ மளமளவெனப் பரவி ஒட்டுமொத்த குடிசையும் பற்றி எரிந்திருக்கிறது. நடக்கின்ற விபரீதத்தை உணர்ந்த மாற்றுத்திறனாளி பாண்டியன் பதறியடித்து எழுந்து, கதறிக் கூச்சல் போட்டிருக்கிறார். சிறிது நேரத்திலேயே அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் கூடி, தண்ணீரை ஊற்றித் தீயை அணைக்க முயன்றுள்ளனர். இருந்தும், புகையால் மூச்சடைத்து தீயில் சிக்கிய பாண்டியன் உடல் கருகி உயிரிழந்தார். இதைப் பார்த்து தாய் பாப்பாத்தி அதிர்ச்சியில் உறைந்தார்.

பாண்டியன், பிறப்பிலிருந்தே மாற்றுத்திறனாளியாக இருந்தாலும், 10-வது வரை படித்திருக்கிறார். மேல் படிப்பை படிக்க ஆசைப்பட்டபோதும், அவரது உடல் அதற்கு ஒத்துழைக்கவில்லை. 10-ம் வகுப்பு வரை ஓரளவிற்கு நடமாடியவர், அதன்பிறகு நடக்கமுடியாமல் முற்றிலுமாக முடங்கிப்போனார். கடந்த 3 வருடங்களாகவே படுத்தபடுக்கையாக, யாருடைய உதவியுமில்லாமல் எழுந்திருக்க முடியாத வகையில் வீட்டிலேயே முடங்கிக்கிடந்தவர். குடிசையில் பற்றிய தீயில் சிக்கி உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே  சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!