வெளியிடப்பட்ட நேரம்: 16:02 (02/06/2018)

கடைசி தொடர்பு:16:11 (02/06/2018)

செல்போனில் பேசிய அடுத்த விநாடியில் துப்பாக்கியால் உயிரை மாய்த்துக்கொண்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்!

பூந்தமல்லியில் பணியில் இருந்த சி.ஆர்.பி.எஃப் வீரர் ஒருவர் செல்போனில் பேசிய அடுத்த விநாடியில் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சிஆர்பிஎப் வீரர் ராஜேஷ்குமார்

பூந்தமல்லியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணிபுரியும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (40). இவர் இன்று காலை சுமார் 10 மணி அளவில் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அவர் கையில் வைத்திருந்த எஸ்.எல்.ஆர் ஏகே 47 ரக துப்பாக்கியால் தனக்குத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இறந்துபோன ராஜேஷ்குமார் உடல் கீழ்பாக்கம் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இதற்கிடையே, துப்பாக்கியால் சுட்டு ராஜேஷ்குமார் தற்கொலை செய்துகொண்டதற்கு பணி சுமை காரணமா அல்லது மன உளைச்சல் ஏதும் காரணமா என்ற கோணத்தில் பூந்தமல்லி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

ராஜேஷ் குமாரின் இறப்பு மத்திய போலீஸ் படை வீரர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க மத்திய படை போலீஸார் பத்திரிகையாளர்களை உள்ளே விட அனுமதிக்கவில்லை. மேலும் ராஜேஷ் இறந்த தகவலைக்கூட உள்ளூர் காவல்துறைக்கு தாமதமாகத்தான் தகவல் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, இவருக்குக் கொடுக்கப்பட்ட தண்டனையின் காரணமாகத்தான் தற்கொலை செய்துகொண்டார் எனத் தகவல் ஒன்று பரவி வருகிறது.