`முதல் வகுப்பு ரூ.400; இரண்டாம் வகுப்பு ரூ.200’ - ஊட்டி - கேத்தி இடையே சிறப்பு மலை ரயில் சேவை | Ooty - Kathie special train from today to improve rural tourism

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (02/06/2018)

கடைசி தொடர்பு:18:00 (02/06/2018)

`முதல் வகுப்பு ரூ.400; இரண்டாம் வகுப்பு ரூ.200’ - ஊட்டி - கேத்தி இடையே சிறப்பு மலை ரயில் சேவை

கிராமப்புற சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், ஊட்டி - கேத்தி இடையே சிறப்பு மலை ரயில் சேவை இன்று தொடங்கியது.

நீலகிரி மாவட்டத்தில் கிராமப்புற சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், ஊட்டி - கேத்தி இடையே சிறப்பு மலை ரயில் சேவை இன்று தொடங்கியது.

சிறப்பு மலை ரயில் சேவை

மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்கு கடந்த மாதம் முதல், சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் வரும் 16-ம் தேதி வரை இயக்கப்படும். சமீபத்தில் நீலகிரி மலை ரயிலை ஆய்வு மேற்கொண்ட தெற்கு ரயில்வே பொது மேலாளர் குல்சிரேஷ்தா, சேலம் கோட்ட மேலாளர் சுப்புராவ் ஆகியோர், ``நீலகிரியில் நிலக்கரி நீராவி இன்ஜின் மூலம் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தனர்.

இந்தநிலையில், ஊட்டி - கேத்தி இடையே, வார நாள்களில், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வட்ட சுற்றுலா ரயில் இயக்கப்படும் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதன்படி, இன்று முதல் இந்தச் சிறப்பு ரயில் சேவை தொடங்கியுள்ளது. இதில், 16 இருக்கைகள் கொண்ட ஒரு முதல் வகுப்பு, 36 இருக்கைகள் மற்றும் 30 இருக்கைகள் கொண்ட இரு இரண்டாம் வகுப்பு என 82 இருக்கைகளுடன் மூன்று பெட்டிகள் இயக்கப்பட்டுள்ளன. ஊட்டியிலிருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு 3 மணிக்கு கேத்தி சென்றடையும். மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு மாலை 4 மணிக்கு ஊட்டி திரும்பும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல் வகுப்புக்கு ரூ.400, இரண்டாம் வகுப்புக்கு ரூ.200 எனக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊட்டி ரயில் நிலையம்

சிறப்பு ரயிலில் பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகளுக்கு சமோசா, வெஜிடேபிள் சூப், ரயில்வே சின்னம் பொறித்த தொப்பி, நீலகிரி மலை ரயில் குறித்த கையேடு, பேப்பர் பை ஆகியவை வழங்கப்பட்டன. கிராமச் சுற்றுலாவை மேம்படுத்த இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். சீஸன் காலங்களில் இந்த அறிவிப்பு வெளிவந்திருந்தால், சுற்றுலாப் பயணிகள் இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்திருப்பார்கள் எனச் சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க