வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (02/06/2018)

கடைசி தொடர்பு:18:20 (02/06/2018)

`முதலில் கொள்கையோடு அரசியலுக்கு வரட்டும்’ - ரஜினி குறித்த கேள்விக்கு கலகலத்த தம்பிதுரை

தம்பிதுரை

``ரஜினி முதலில் கொள்கையோடு அரசியலுக்கு வரட்டும். அதன் பின்னர், அவரது கருத்து பற்றி பார்த்துக்கொள்ளலாம்" என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.

கரூரில் பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்துகொண்டனர். இதைத் தொடர்ந்து, கரூர் காந்திகிராமம் பகுதியில் ரூ.268 கோடி மதிப்பில் நடைபெற்றுவரும் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணியைப் பார்வையிட்ட பிறகு, மக்களவைத் துணை சபாநாயகர்  தம்பிதுரை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "கரூர் அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டுமானப் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. அடுத்த கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்" என்றார்.

அப்பாேது குறுக்கிட்ட செய்தியாளர்கள் அவரிடம்,"அமைக்கப்பட்டுள்ளது காவிரி மேலாண்மை வாரியமா அல்லது ஆணையமா’ என்று கேட்டனர். அதற்கு அவர், "ஆணையமாக இருந்தால் என்ன, வாரியமாக இருந்தால் என்ன. தமிழகத்துக்கு தண்ணீர் கிடைத்தால் போதும்" என்றார். தூத்துக்குடி சம்பவம் குறித்தும் ரஜினிகாந்த் கூறிய கருத்து பற்றியும் கேட்டபோது, "ரஜினி முதலில் கொள்கையோடு அரசியலுக்கு வரட்டும். அதன் பின்னர், அவரது கருத்து பற்றி பார்த்துக்கொள்ளலாம். அதேபோல, எஸ்.வி.சேகர் ஒரு நடிகர். எங்களது கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அவ்வளவுதான். மற்றபடி, அவர் பெரிய அரசியல்வாதி அல்ல. விரைவில் காவல்துறை அவர்மீது உள்ள குற்றச்சாட்டுக்கு நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம்" என்றார்.

`தூத்துக்குடி கலவர சம்பவ பகுதியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்க்கச் செல்வாரா, மாட்டாரா' என்ற கேள்விக்கு, "இதை முதல்வரிடம் கேளுங்கள். மேலும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவாலயத்தில் நடத்துவது சட்டப்பேரவை கூட்டமாகி விடாது. அது குழந்தைகள் விளையாட்டு போன்றது. விரைவில் சட்டப்பேரவைக்கு வருவார்கள்" என்றார்.