`நன்றியெல்லாம் எதுக்கு; நான் எதுவும் சாதிக்கல’ - வாழ்த்த வந்தவர்களிடம் நெகிழ்ந்த பொன்.மாணிக்கவேல் | no greetings for me in statue rescue case says IG pon manickavel

வெளியிடப்பட்ட நேரம்: 17:05 (02/06/2018)

கடைசி தொடர்பு:18:37 (02/06/2018)

`நன்றியெல்லாம் எதுக்கு; நான் எதுவும் சாதிக்கல’ - வாழ்த்த வந்தவர்களிடம் நெகிழ்ந்த பொன்.மாணிக்கவேல்

அரை நூற்றாண்டுக்கும் மேலாக குஜராத் அருங்காட்சியகத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த ராஜராஜ சோழன் - உலகமாதேவி சிலைகளை மீட்டு சரித்திர சாதனை படைத்துள்ளார் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல். இதன்மூலம் தமிழ்நாட்டு மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இதனால் இவர் திணறும் அளவுக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளது.

பொன் மாணிக்கவேல்

தற்போது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி-யாகப் பொறுப்பு வகிக்கும் பொன்.மாணிக்கவேல் ரயில்வே ஐ.ஜி-யாகவும் பணியாற்றி வருகிறார். இதற்கு முன் இவர் வகித்த பொறுப்புகளிலும் ஏராளமான சாதனைகளை நிகழ்த்தி பொதுமக்களிடம் நன்மதிப்பைப் பெற்று வந்தார். இவர் எஸ்.பி-யாக இருந்த காலகட்டத்தில் காவல்நிலையங்களில் பொதுமக்கள் மிகவும் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்பதில் தீவிர கவனம் செலுத்தினார். காவல்நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை நாற்காலியில் உட்காரச் சொல்லி பேச வேண்டும் எனக் கண்டிப்புடன் உத்தரவு போட்டார். குற்றங்களை விரைவாகக் கண்டுபிடித்து வழக்குகளைச் சீக்கிரமாக முடிக்க வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்தக்கூடியவர். மக்களிடம் தவறாக நடந்துகொள்ளக்கூடிய காவல்துறை அதிகாரிகள்மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடியவர்.

அதேசமயம் தன்கீழ் பணியாற்றும் நேர்மையான அதிகாரிகளிடம் மிகவும் மனித நேயத்துடனும் நடந்துகொள்வார். ரயில்வே துறையிலும் தனது ஆக்கபூர்வமான செயல்பாடுகளால் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளார். இவர் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி-யாக பெறுப்பேற்ற பின்புதான், இதற்கு முன்பு தமிழ்நாட்டில் நிகழ்ந்த ஏராளமான சிலை கடத்தல்கள் வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்பட்டன. கடவுள் சிலை செய்ததில் நடந்த முறைகேடுகளும் கண்டுப்பிடிக்கப்பட்டன. தற்போது ராஜராஜன் - உலகமாதேவி சிலைகளை மீட்டதன் மூலமாக, இவர் தன்னுடைய கடந்தகால சாதனைகளை விஞ்சி, மீட்கப்பட்ட சிலைகள் சென்னையிலிருந்து, சிதம்பரம், கும்பகோணம், திருவையாறு வழியாக நேற்று தஞ்சை பெரியகோயிலுக்குக் கொண்டு வரப்பட்டன. இந்தத் தகவல் அறிந்து ஏராளமான பொதுமக்கள் ஐ.ஜி.பொன்மாணிக்கவேலுக்கு பாராட்டு தெரிவிக்க அனைத்துப் பகுதிகளிலும் குவிந்திருந்தார்கள். கும்பகோணம் முழுக்க பாராட்டு போஸ்டர்கள் பளிச்சிட்டன.

தமிழ்நாட்டில் இதற்கு முன் வேறு எந்த ஒரு காவல்துறை அதிகாரிக்கும் இந்தளவுக்கு நெகிழ்ச்சியான பாராட்டுகள் குவிந்ததில்லை. பாராட்டுகளோடு மட்டுமல்லாமல் பலர், உணர்ச்சிபூர்வமாக நன்றியும் தெரிவித்தார்கள். நேற்று இரவு தஞ்சை பெரியகோயிலுக்குள் ராஜராஜன் -உலகமாதேவி சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றதால், இதற்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்காகவும் பாராட்டுகளைத் தவிர்ப்பதற்காகவும் பெரியகோயில் முன்புள்ள தகவல் மையத்துக்குள் மூன்றுமணிநேரம் அமர்ந்திருந்தார். இதுநாள் வரையிலும் ஒரு டி.எஸ்.பிகூட இந்தத் தகவல் மையத்துக்குள் அமர்ந்தது இல்லை. `பொன்மாணிக்கவேல் எங்க இருக்கார். அவரைப் பார்த்து ஒரு வாழ்த்து சொல்லணும்னுதான் நாங்க வந்தோம்' எனப் பெரியகோயிலுக்குள் இருந்த பொதுமக்கள் விசாரித்துக்கொண்டே இருந்தார்கள். இவர்களில் பலர், ஆர்வம் தாங்காமல், காவல்துறையினரிடம் கேட்டு அவர் இருக்கும் இடத்தைத் தெரிந்துகொண்டார்கள்.

கோயிலுக்கு முன்பு தகரத்தால் அமைக்கப்பட்ட தகவல் மையத்தின் முன்பு பெரும் கூட்டம்கூடத் தொடங்கியது. கோயிலுக்குள் சிறப்பு பூஜைகள் முடிந்து ராஜராஜன் - உலகமாதேவி சிலைகள், கருவறைக்கு முன்புள்ள தியாகராஜர் மண்டபத்தில் வைக்கப்பட்ட பின் கோயிலுக்குள் வந்தார் பொன்மாணிக்கவேல். பொதுமக்கள் பலர் தொடர்ச்சியாக அவருக்கு கைகொடுத்து ராஜராஜனை மீட்டுக் கொண்டு வந்ததற்கு ரொம்ப நன்றி சார், வாழ்த்துகள் சார் எனச் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். `நன்றியெல்லாம் எதுக்கு. உங்களை மாதிரியான நல்ல எண்ணம் கொண்டவங்களோட ஒத்துழைப்பினாலயும் கடவுளோட அனுக்கிரகத்துனாலயும்தான் இந்தச் சிலைகள் மறுபடியும் இங்க வந்து சேர்ந்திருக்கு. இதுல நான் எதுவும் சாதிச்சிடல” எனத் தன்னடக்கத்துடன் பொன்மாணிக்கவேல் சொன்னதைக் கேட்டு, மக்கள் நெகிழ்ந்துபோனார்கள். `இந்தக் காலத்துல இப்படி ஒரு மனுஷனா. சாதாரண ஏட்டு, கான்ஸ்டபுள்கள்கூட பொதுமக்கள்கிட்ட திமிரா நடந்துக்குவாங்க. ஆனா இவரைப் பாருங்க... எவ்வளவு பெரிய சாதனையைச் செஞ்சிட்டு, இவ்வளவு அடக்கமா இருக்கார்’’ எனப் பேசிக் கொண்டார்கள். சமூக வலைதளங்களிலும் இவருக்கு வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளது.