வெளியிடப்பட்ட நேரம்: 18:57 (02/06/2018)

கடைசி தொடர்பு:18:57 (02/06/2018)

``காவிரி நீர் ஆணையம் தமிழகத்துக்கு வெற்றியா?" - என்ன சொல்கிறார் நல்லுசாமி

காவிரி - அணை

காவிரி நதிநீர்ப் பங்கீட்டு விவகாரம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை அமைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருப்பது தமிழக அரசுக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேலும், மத்திய அரசிதழில் காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி முறைப்படுத்தும் குழு ஆகியவை அமைக்கப்பட்டு வெளியிடப்பட்டிருப்பதன் மூலம் தமிழகத்தின் உரிமையும், விவசாயிகளின் உரிமையும் மீட்டெடுக்கப்பட்டிருப்பதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களிடையே காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம், நதிநீர் முறைப்படுத்தும் குழுவை அமைக்க வலியுறுத்திப் பல்வேறு மேல்முறையீட்டு வழக்குகள் தொடரப்பட்டன. இவ்வழக்குகளின் மீது உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 16- ம் தேதியன்று இறுதித் தீர்ப்பளித்தது. அதன்படி, ஆறு வார காலத்துக்குள் அந்த இரு அமைப்புகளையும் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் உத்தரவிட்டிருந்தனர். எனினும், கர்நாடக மாநிலச் சட்டசபைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, அதுதொடர்பான நடவடிக்கையை எடுக்காமல் மத்திய அரசு, கால அவகாசம் கோரியது. இதற்கிடையே இறுதித் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள `ஸ்கீம்' என்ற வார்த்தைக்கு விளக்கமும் கேட்டிருந்தது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்தி தமிழக அரசு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது. இதையடுத்து, திருத்தப்பட்ட வரைவு அறிக்கையை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்குகள் அனைத்தையும் முடித்து வைத்து உச்ச நீதிமன்றம் கடந்த 18- ம் தேதி உத்தரவிட்டது. பருவமழை தொடங்கும் முன்பாக மேலாண்மை ஆணையத்தையும், முறைப்படுத்தும் குழுவையும் அமைக்குமாறு நீதிபதிகள் கூறியிருந்தனர்.

காவிரி நீர் ஆணைய அறிக்கை

இந்நிலையில், மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில், ``காவிரி நீர் மேலாண்மை ஆணையம், ஒரு தலைவர், இரண்டு முழுநேர உறுப்பினர்கள் மற்றும் பல பகுதிநேர உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்படுகிறது. முழுநேர உறுப்பினர்கள் இருவரையும், பகுதி நேர உறுப்பினர்களில் இருவரையும் மத்திய அரசு நியமிக்கும். இவர்கள் தவிர, தமிழ்நாடு உள்பட நான்கு மாநிலங்களும் தலா ஒரு பிரதிநிதிகளை பகுதிநேர உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தின் செயலாளரையும் மத்திய அரசே நியமிக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நீர்வளத்துறையின் அறிவிக்கை உடனடியாக அரசிதழில் வெளியிடப்பட்டது. 

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கும் உத்தரவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கையெழுத்திட்டுள்ளார். ஆணையத்தின் தற்காலிகத் தலைவராக நீர்வளத் துறை செயலாளர் யூ.பி.சிங் செயல்படுவார். ஆணையத்துக்கு நிரந்தரத் தலைவர் நியமனம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, காவிரி மேலாண்மை ஆணையம், முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டு, அந்த அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது, தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ``மத்திய நீர்வள ஆதாரம், நதிநீர் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகளை அமைத்து, அதை மத்திய அரசின் அரசிதழில் வெளியிட்டுள்ளது. இது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் செயல்பட்டு வரும் தமிழக அரசுக்கும் தமிழ்நாட்டு விவசாயப் பெருங்குடி மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

ஜெயலலிதா மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளாலும், சட்டப் போராட்டத்தினாலும் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டாலும், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை மத்திய அரசிதழில் 19.2.2013 அன்று வெளியிடப்பட்டு செயலாக்கத்துக்கு வந்தது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை மத்திய அரசிதழில் கொண்டு வந்ததுதான் தன்னுடைய 30 ஆண்டுகால அரசியல் வாழ்வில், தான் செய்த சாதனைகளில் முதன்மையானதாகக் கருதுவதாகவும், தான் பல ஆண்டுகள் பொது வாழ்வில் இருந்து கஷ்டப்பட்டதற்கு இந்த வெற்றிதான் தனக்கு முழு மனநிறைவைத் தந்திருக்கிறது என்றும் ஜெயலலிதா தெரிவித்ததைக் கொண்டு காவிரி நதிநீர்ப் பிரச்னையில் அவருக்கு இருந்த உள்ளார்ந்த அக்கறையும், ஈடுபாடும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகப் புரிந்தது.

செ. நல்லுசாமி

இந்தச் சூழ்நிலையில், காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம், கடந்த பிப்ரவரி மாதம் இறுதித் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, நான் பிரதமரிடம் நேரிலும் மற்றும் கடிதங்கள் வாயிலாகவும் இவ்வமைப்புகளை உடனே அமைக்க வலியுறுத்தினேன். நாடாளுமன்றத்திலும் அ.தி.மு.க. எம்.பி-க்கள் காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், விவசாயிகளின் வாழ்வாதாரம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது என்பதையும், இதற்காகப் பாடுபட்ட அனைவருக்கும் என்னுடைய மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டிருப்பது பற்றி தமிழ்நாடு விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளர் செ. நல்லுசாமியிடம் பேசினோம். அவர் கூறுகையில், ``காவிரி நடுவர் மன்றத்தின் 1992- ம் ஆண்டு இடைக்காலத் தீர்ப்பின்படி, 205 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதை அரசிதழில் வெளியிட்டார்கள். ஆனால், நடைமுறைப்படுத்தவில்லை. பின்னர் இறுதித்தீர்ப்பு 2007- ம் ஆண்டில், வெளியிடப்பட்டு 2013- ம் ஆண்டில் கெசட்டில் வெளியிட்டார்கள். அதையும் நடைமுறைப்படுத்த முடியவில்லை. கடந்த ஆண்டில், காவிரி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் பல உத்தரவுகளை, பல்வேறு காலகட்டங்களில் பிறப்பித்து, தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடுமாறு உத்தரவிட்டது. ஆனால், எந்த உத்தரவையும் கர்நாடகா நடைமுறைப்படுத்தவில்லை. கடைசியாக விநாடிக்கு 2,000 கன அடி தண்ணீராவது திறந்து விடுமாறு நீதிமன்றம் விடுத்த உத்தரவையும் கர்நாடக அரசு மதிக்கவில்லை. அண்மையில் உச்ச நீதிமன்றம் 4 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்குத் திறந்து விடுமாறு உத்தரவிட்டது. அதையும் நடைமுறைப்படுத்தவில்லை. காவிரி ஆணையம் என்கிற ஒன்று அமைத்தாகி விட்டது. ஆனால், கர்நாடகத்தில் உள்ள கபினி, ஹேமாவதி, ஹேரங்கி, கிருஷ்ணராஜ சாகர் எல்லா அணைகளும், அவற்றின் பராமரிப்புகளும் அந்த மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அதேபோல், தமிழகத்தின் மேட்டூர், பவானிசாகர், அமராவதி போன்ற அணைகளும் நம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அப்படி இருக்கும்போது, ஆணையத்தைச் சேர்ந்தவர்கள் மாநில அரசின் அனுமதியின்றி எப்படி, சம்பந்தப்பட்ட அணைகளைப் பார்வையிடவோ அல்லது அதுதொடர்பான முடிவுகளை எடுக்கவோ முடியும். எனவே, காவிரி நீர் ஆணையம் என்று அமைக்கப்பட்டிருப்பது வெறும் கண்துடைப்பு நாடகம். 

அணையின் பராமரிப்பு, தண்ணீர் விநியோகம் ஆகியவற்றை மத்திய நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளாதவரை, ஆணையம் அமைத்தாலும் காவிரியில் தமிழகத்துக்குத் தண்ணீர் கிடைப்பது என்பது இயலாத காரியம்தான். பராமரிப்புச் செலவுகளை அந்தந்த மாநில அரசுகள் கொடுத்து விட வேண்டும். ஆனால், பராமரிப்பைப் பொறுத்தவரை மத்திய நீர்வள ஆணையம் எடுத்துக் கொண்டாலொழிய இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு இருக்காது.

அணைகளின் செயல்பாடு, பராமரிப்பு, விநியோகம் அனைத்தையும் காவிரி நீர் ஆணையமே எடுத்துக்கொண்டால்தான் நிரந்தரத் தீர்வு ஏற்படும். எனவே, கர்நாடக மாநிலத்தின் தேவைக்குப் போக உபரியாகக் கிடைக்கும் தண்ணீரையே அந்த மாநில அரசு, காவிரியில் தமிழகத்துக்குத் திறந்து விடும். ஏற்கெனவே நான் இந்த விஷயத்தில் தெரிவித்திருப்பதைப் போன்று, உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ள அளவின் அடிப்படையில், அன்றாடம், அதாவது தினந்தோறும் தண்ணீரைப் பங்கிட்டு வழங்கினால்தான், தமிழகத்துக்கு உரிய தண்ணீர் கிடைக்கும். இல்லாவிட்டால் தொடர்ந்து பிரச்னை நீடிக்கவே செய்யும் என்பதே என் கருத்து" என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்