`சட்டப்பேரவை கூட்டத்தில் மீண்டும் பங்கேற்க முடிவு' - திமுக அறிவிப்பு!

வரும் திங்கள்கிழமை முதல் சட்டப்பேரவை கூட்டத்தில் மீண்டும் பங்கேற்க திமுக முடிவு செய்துள்ளது. 

திமுக

இந்த ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மானியக்கோரிக்கைகள் மீதான விவாதங்களை நடத்தி, நிதி ஒதுக்கீட்டிற்கான ஒப்புதல் பெறுவதற்காகச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் 29ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்ற திமுக உறுப்பினர்கள்,   ``ஸ்டெர்லைட் மூடுவது குறித்து அமைச்சரவையைக் கூட்டி, கொள்கை முடிவு எடுத்துத் தீர்மானம் போட்டு அரசாணை பிறப்பிக்கும்வரை சட்டமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ள மாட்டோம்'' எனக் கூறி சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து மறுநாளே அண்ணா அறிவாலயத்தில் போட்டி சட்டமன்றக்கூட்டத்தையும் நடத்தினர். இதற்கிடையே, திமுக மீண்டும் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க வேண்டும் என்று அதன் கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், தீர்மானங்கள் குறித்து விளக்கம் அளித்தார். அதன்படி, வரும் திங்கள்கிழமை முதல் சட்டப்பேரவை கூட்டத்தில் மீண்டும் பங்கேற்பது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்காக ஜூன் 5, 8, 12ஆம் தேதிகளில் திமுக நடத்தவிருந்த மாதிரி சட்டப்பேரவை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜூன் 12 முதல் மேட்டூர் அணையைத் திறந்து விடக் கோரி திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தண்ணீர் திறக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவும், அதற்குத் தமிழக அரசு அழுத்தம் தரவும் வேண்டும் என்றும் தீர்மானம் போடப்பட்டுள்ளது. இதேபோல் நாளை தி.மு.க தலைவர் கருணாநிதியின் 95ஆவது பிறந்தநாளை தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!