வெளியிடப்பட்ட நேரம்: 01:15 (03/06/2018)

கடைசி தொடர்பு:01:15 (03/06/2018)

காலா படத்துக்குத் தடை விதிப்பது ஏற்கத்தக்கது அல்ல..! ஜி.கே.வாசன்

ரஜினியின் காலா படத்தை கர்நாடகத்தில் திரையிடக் கூடாது என அம்மாநிலத்தில் கூறி வருகிறார்கள். அதற்காகப் போராட்டமும் நடத்தி வருகிறார்கள். அரசியல் வேறு சினிமா வேறு என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

ஜி.கே.வாசன்

தஞ்சாவூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக வந்த த.மா.கா  தலைவர் ஜி.கே.வாசன் செய்தியார்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், 'ரஜினி தமிழகத்தில் போராட்டம் நூறு சதவிகிதம் கூடாது என ஊடகங்களில் கூறவில்லை. போராட்டமே கூடாது எனவும் ரஜினி பேசியதாக நான் பார்க்கவில்லை. ஒரே கருத்தை இன்னொருவர் கூற வேண்டும் என்பது சாத்தியம் இல்லை. கருத்து வேறுபாடும், கருத்து மோதலும் ஜனநாயகத்தில் சகஜம், ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு செயல்பாடும், அணுகுமுறையும் உள்ளன. ஆனால் பிரச்னையின் நோக்கமும், அதற்கான தீர்வும் ஒன்றாகத்தான் உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பது அனைவரின் கருத்தாக இருந்தது. அதுதான் தீர்வாகவும் இருந்தது. இந்த ஆலை மூட காரணம் போராட்டம்தான். அவ்வாறு போராடியவர்களைத்தான் ரஜினிகாந்த் பார்த்து ஆறுதல் கூறி உதவி செய்திருக்கிறார். எனவே, போராட்டமே வேண்டாம் என ரஜினி கூறவில்லை என்பதுதான் உண்மை. 

காவிரி ஆணையம் அரசிதழலில் மத்திய அரசு வெளியிட்டதற்கு எந்த அரசியல் கட்சியும் வெற்றி கொண்டாட முடியாது. இந்த வெற்றி எங்ளுக்குத்தான் என அரசியல் கட்சியினர் யார் கூறினாலும் அதை விவசாயிகள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. முதலில் விவசாயிகளுக்குக் குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் வர வேண்டும். கர்நாடகா தரவேண்டிய தண்ணீரைப் பெற்றுத் தர அனைத்து அரசியல் கட்சியினரும் ஒற்றைக் கருத்துடன் பேசி தண்ணீரைப் பெற்றுக்கொடுத்தால் மட்டுமே அது தான் வெற்றியாகும்.  

விவசாயிகள் தண்ணீரைப் பார்க்காமல் வறட்சியில் உள்ளனர். வெறும் அரசிதழில் வெளியிட்டதை வைத்துக்கொண்டு வெற்றி கொண்டாடுவது நல்ல அரசியல் அல்ல. மத்திய அரசு உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப அரசிதழில் வெளியிட்டுள்ளது நல்ல செய்தி. ஆனால் அதை காலதாமதம் செய்யாமல் ஆணையம், உறுப்பினர்கள் நியமனம் என அனைத்தையும் செயல்படுத்த வேண்டும். இப்போது குறுவைக்குத் தேவை தண்ணீர். தண்ணீர் இல்லை என்றால் 5 லட்சம் ஏக்கருக்கு மேல் விவசாயம் வீணாகி விடும். ஜூன் மாதம் 12-ம் தேதிக்குள்ளாக தண்ணீரை மாநில அரசு பெற்றுத் தர வேண்டும். கடந்த முறை அரசிதழிலில் வெளியிடப்பட்ட பிறகும் இன்று வரை தண்ணீர் கிடைக்கவில்லை. கர்நாடகாவில் புதியதாக ஆட்சிக்கு வந்துள்ள கூட்டணி அரசு இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். 

சட்டமன்றத்தில் ஆளும்கட்சியும் வெளிப்படையாகச் செயல்பட தாயாராக இல்லை. எதிர்க்கட்சியும் சட்டமன்றத்தில் அமர்ந்து ஆளும்கட்சியுடன் வாதாடி உண்மை நிலையை வெளிக்கொண்டு வர தயாராக இல்லை. எதிர்க்கட்சிகள் சட்டமன்றத்தைப் புறக்கணித்துக் கேள்விக் கேட்கிறோம் என்றாலும் மக்கள் இதனால் ஏமாந்த நிலையில் தான் இருக்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை. ஆளும்கட்சியினர் மக்களின் எண்ணங்களுக்கு ஏற்றார் போல நடந்துகொள்ளவில்லை. அவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் வாய்ப்பு கொடுக்கமாட்டார்கள்.

பெட்ரேல், டீசல் விலை உயர்வு இன்றைக்கு விண்ணைத் தொட்டுள்ளது. இது மத்திய அரசின் அஜாக்கிரதையான போக்கு. இதை மாநில அரசு வேடிக்கை பார்க்கிறதே தவிர தன்னுடைய கலால் வரியைக் குறைத்து மக்களின் சுமையைக் குறைக்க வேண்டும் என்கிற அக்கறை இல்லை. இந்த உயர்வு காரணமாக அத்தியவசியப் பொருள்களின் விலை மறைமுகமாக உயர்ந்துள்ளது. எனவே மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி, வரி வரம்புக்குள்ளாக கொண்டு வர வேண்டிய அவசரம் உள்ளது. இதை உடனே செயல்படுத்த வேண்டும்.

ஓய்வறிய உழைப்பாளி, தமிழக மக்களின் நலனுக்காகப் போராடி வருபவர் தி.மு.க தலைவர் கருணாநிதி. அவர் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன். ரஜினியின் காலா படத்தை கர்நாடகாவில் வெளியிட மாட்டோம் எனக் கர்நாடக அமைப்பினர் சொல்லி வருகிறார்கள். அரசியல் வேறு சினிமா வேறு என்பதை அவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். காலா படத்திற்கான தடை விதிப்பது ஏற்புடையது அல்ல' என்று கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க