காவிரி நீர் ஆணையத்துக்கு உடனே நிரந்தரத் தலைவர் வேண்டும்- தமிழக விவசாயிகள் சங்கம்

காவிரி நீர்

மேலும் தாமதம் செய்யாமல் காவிரி நீர்மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தரத் தலைவரை நியமிப்பதுடன் குழு உறுப்பினர்களையும் உடனடியாக தீர்மானித்து ஆணையம் செயல்படுவதற்கான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. 

இது குறித்து அவ்வமைப்பின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் கூறியதாவது: 

காவிரி தொடர்பான வழக்கில் பருவகாலம் துவங்குவதற்கு முன்பாக காவிரி நீர்மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவை அமைத்து மத்திய அரசிதழில் வெளியிட வேண்டுமென்று உச்சநீதிமன்றம் மே மாதம் 18 அன்று உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவது என்ற பெயரில் ஜுன் 1-ம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதாக மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தற்காலிகத் தலைவராக மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங்கை  நியமனம் செய்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை உச்சநீதிமன்றத்தை ஏமாற்றுவதற்குப் பயன்படலாமே தவிரத் தீர்ப்பின் நோக்கத்தை நிறைவேற்ற உதவாது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு தற்காலிகத் தலைவர் நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம் அவரால் எந்த முடிவுமே எடுக்கமுடியாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு முழுமையாக அமைக்கப்பட்டால் தான் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள அம்சங்களை நிறைவேற்றுவதற்கான பணிகளில் இக்குழுக்கள் ஈடுபட முடியும். ஆனால், மத்திய அரசின் இந்த நடவடிக்கை காவிரிப் பிரச்னையில் மேலும் காலதாமதப்படுத்தும் செயலாகவே இருக்கிறது. எனவே, மேலும் தாமதம் செய்யாமல் காவிரி நீர்மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை நியமனம் செய்வதுடன், குழு உறுப்பினர்களையும் உடனடியாக தீர்மானித்து ஆணையம் செயல்படுவதற்கான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய அரசை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோருகிறது.

தென்மேற்குப் பருவமழை துவங்கி கர்நாடக அணைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துவரும் நிலையில் இந்த ஆண்டாவது குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் கிடைக்கும்வகையில் தமிழக அரசு விரைந்து செயல்பட மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு விவசாயிகள் சங்கப் பொதுச்செயலாளர் சண்முகம் கூறினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!