”கச்சநத்தம் படுகொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்" திருமாவளவன் கோரிக்கை!

கச்சநத்தம் படுகொலையை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தொல்.திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

கச்சநத்தம் சி.பி.ஐ. விசாரணை

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்,   "சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் கடந்த 28 -ம் தேதி இரவு சாதிவெறியர்கள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மூன்றுபேர்  கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஐந்துபேர் உயிருக்குப் போராடும் நிலையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இந்த கொடூரத்தைக் கண்டித்து மூன்று நாட்களாக மதுரையில் போராடிக்கொண்டிருந்த பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் ஆறுதல் கூறினோம். சாதி ஒழிப்புக்காக கச்சநத்தம்  களத்தில் பலியான தோழர்களுக்கு அஞ்சலி செலுத்தினோம். 

சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி ஆகிய பகுதிகள் சாதிய வன்கொடுமைகள் நிறைந்த பகுதிகளாகும். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் தொடர்ந்து இதனை எதிர்த்துப் போராடி வருகின்றனர். திருப்பாசேத்தி அருகேயுள்ள கச்சநத்தம் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் 40 குடும்பங்கள் மட்டுமே வசித்து வருகின்றனர். மிகவும் சிறுபான்மையாகவுள்ள அவர்களைத் தொடர்ந்து இழிவுசெய்வதும் ஒடுக்குவதும் போன்ற வன்கொடுமைகளில் மாற்றுசாதியவாதிகள் ஈடுபட்டுவந்துள்ளனர். 

அண்மையில்  கோயில் திருவிழாவின்போது, சாதிவெறியர்கள் குறுக்கும் நெடுக்குமாக இருசக்கர வண்டிகளை அதிவேகமாக ஓட்டிச்சென்றுள்ளனர். இதனைத் தட்டிக்கேட்ட பட்டியல் இன இளைஞர்களை, சாதியைச் சொல்லி இழிவுப்படுத்தியுள்ளனர், கொலைமிரட்டலும் விடுத்துள்ளனர். 

இந்நிலையில்தான் ஒடுக்கப்பட்ட சமூக இளைஞர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதனையடுத்தே அந்தக் கொடூரமான தாக்குதலை சாதிவெறிக் கும்பல் நடத்தியுள்ளது. அதற்குத்துணையாக பழையனூர் காவல்நிலைய அதிகாரிகள் சிலர் செயல்பட்டுள்ளனர்.  பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று அவ்வாறு செயல்பட்ட காவல் உதவி ஆய்வாளர்கள் இருவரைத் தற்போது அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது. 

காவல்துறை அதிகாரிகளும் இந்தப் படுகொலையில் தொடர்பு கொண்டிருக்கிறார்கள் என்கிற நிலையில் இவ்வழக்கைக் காவல்துறையினரே விசாரிப்பது நீதி கிடைக்க ஏதுவாக அமையாது. எனவே, இதனை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமெனவும் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின்படி தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!