”எங்களுக்கு உங்கள் ஆதரவு தேவை; மைதானத்துக்கு வாருங்கள்!” கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி கோரிக்கை! | Indian football skipper, request to Indians to come and watch football in grounds

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (03/06/2018)

கடைசி தொடர்பு:08:00 (03/06/2018)

”எங்களுக்கு உங்கள் ஆதரவு தேவை; மைதானத்துக்கு வாருங்கள்!” கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி கோரிக்கை!

”இது இந்திய கால்பந்து விளையாட்டின் மிக முக்கியமான காலகட்டம். எங்களுக்கு உங்களின் ஆதரவு தேவை. அதனால் மைதானம் வாருங்கள், ஆதரவு தாருங்கள்” என இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

சுனிச் சேத்ரி

இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டுக்குக் கிடைக்கும் வரவேற்பு மற்ற விளையாட்டுகளுக்குக் கிடைப்பதில்லை. எனினும், உள்நாட்டில் நடக்கும் பல தொடர்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது, ப்ரோ கபடி, ஐ.எஸ்.எல் போன்ற தொடர்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எனினும் இந்தியா விளையாடும் போட்டிகளுக்கு கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டுகளுக்கு  உரிய வரவேற்பு கிடைப்பதில்லை. 

இந்நிலையில் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, ரசிகர்களை மைதானத்தில் வந்து விளையாட்டைப் பார்க்குமாறு கோரியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மும்பையில் சீன தைபே அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற நிலையில் நேற்று ட்விட்டரில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர், “கால்பந்து தான் எங்கள் உலகம். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து மும்பைக்கு வந்து எங்களை உற்சாகப்படுத்த வந்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி.  ஆனால் இன்று இந்த வீடியோ உங்களுக்காக அல்ல. மைதானத்தில் நேரில் வந்து போட்டியை காணாதவர்களுக்குத் தான் இந்த வீடியோ. நீங்கள் கால்பந்து ரசிகராக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் மைதானம் வந்து போட்டியைக் காண இரண்டு காரணங்கள் உள்ளது. ஒன்று, கால்பந்து உலகிலே சிறந்த விளையாட்டு. இரண்டு, நாங்கள் நாட்டுக்காக விளையாடுகிறோம். 

சுனில் சேத்ரிஇந்தியாவில் கால்பந்து ரசிகர்கள் பலர் ஐரோப்பாவில் நடைபெறும் கால்பந்து தொடர்களுக்கு மிகப்பெரிய ரசிகர்களாக இருப்பதை பார்க்கிறேன். நீங்கள், எங்களை அவர்கள் அளவுக்கு இல்லை என நினைக்கலாம். ஒத்துக்கொள்கிறேன். அவர்கள் அருகில் கூட நாங்கள் இல்லை. ஆனால், நமது கனவு மற்றும் உறுதிதன்மையைக் கொண்டு நீங்கள் போட்டியைக்காணும் நேரத்தைப் பயனுள்ளதாக்க முடியும். எங்கள் மீது நம்பிக்கை இழந்தவர்களுக்கு ஒரு கோரிக்கை, நீங்கள் மைதானம் வந்து எங்கள் விளையாட்டைப் பாருங்கள். 

இணையத்தில் மட்டுமே விமர்சனம் வைத்தால் போதாது. மைதானத்துக்கு வாருங்கள். எங்கள் முகத்தின் நேர் விமர்சனம் செய்யுங்கள். உற்சாகப்படுத்துங்கள், கத்துங்கள், திட்டுங்கள். ஒருநாள் நீங்கள் அனைவரும் எங்களுக்காக ஒன்றிணைந்து நிற்கலாம். மைதானத்துக்கு வராமல் இருக்க வேலை, பள்ளி எனப் பல காரணம் இருக்கலாம். ஆனால் உங்களுக்குத் தெரியாது நீங்கள் எங்களுக்கு எத்தனை முக்கியம் என்று? மும்பையில் வரும் 4, 7 மற்றும் 10 -ம் தேதி நடைபெறும் போட்டிகளை கண நேரில் வாருங்கள். வந்து உற்சாகப்படுத்துங்கள், விமர்சனம் செய்யுங்கள், போட்டி குறித்து பேசுங்கள், வீட்டுக்குப் போன பின்னரும் போட்டி குறித்து விவாதம் செய்யுங்கள். மொத்தத்தில் விளையாட்டில் எங்களோடு இணைந்திருங்கள். காரணம், இது இந்திய கால்பந்து விளையாட்டின் மிக முக்கியமான காலகட்டம். எங்களுக்கு உங்களின் ஆதரவு தேவை. அதனால் மைதானம் வாருங்கள், ஆதரவு தாருங்கள். ஜெய்ஹிந்த்” எனத் தெரிவித்துள்ளார். 

இவரது இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலியும் இந்த விடியோ குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பேசியுள்ளார். அவர், “எனது நண்பர் சுனில் சேத்ரி வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தார். ரசிகர்கள் மைதானம் சென்று போட்டியைப் பாருங்கள். வெற்றி தோல்வி முக்கியம் இல்லை. அவர்கள் மிகக் கடினமாக முயற்சி செய்கிறார்கள். தற்போது அவர்கள் விளையாட்டில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளனர். அனைத்து விளையாட்டுகளையும் ஆதரிக்க வேண்டும். அனைவரும் நாட்டுக்காக தான் விளையாடுகிறார்கள். அதனால், மைதானத்துக்குச் சென்று அவர்களை உற்சாகப்படுத்துங்கள்” என்றார்.