வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (03/06/2018)

கடைசி தொடர்பு:08:30 (03/06/2018)

‘ உன் கரகரத்த குரல் வாளெடுத்து, எழுத்துக் கேடயம் ஏந்திவா’ - தந்தைக்கு கனிமொழியின் பிறந்த நாள் வாழ்த்து

திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளுக்கு அவரது மகளும் திமுக எம்.பியுமான கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துகளைப் பதிவு செய்துள்ளார்.

கனிமொழி

திமுக தலைவர் கருணாநிதி இன்று தனது 95-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதனால் அவரது இல்லமான கோபாலபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. வண்ண விளக்குகள், தோரணங்கள், வாழை மரங்கள் என அவரது வீடு முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு 12 மணிக்கு திமுக தொண்டர்கள் பலர் கருணாநிதியின் இல்லம் முன் கேக் வெட்டி அவரின் பிறந்தநாளை கொண்டாடினர். 

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதிக்குப் பல அரசியல் தலைவர்களும் தங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதன் வரிசையில், கருணாநிதியின் மகளும் திமுக-வின் எம்.பியுமான கனிமொழி, தன் தந்தை மீண்டும் எழுந்து அரசியல் செய்ய வேண்டும் என்று கவிதை வடிவில் வாழ்த்துகளைப் தெரிவித்துள்ளார்.  “நீ இல்லாத தெருக்களில் உன் உடன்பிறப்புகளின் குருதி, ஆறாய் ஓடுகிறது. உயிரற்ற உடல்களை பழந்துணி போல் இழுத்து வருகிறார்கள். கிடத்தப்பட்ட உடல்களை வட்டமிடும் கழுகுகள், உணர்வற்ற உடலில் தன் பங்கு தேடும் ஓநாய்கள். தெருவெங்கும் இரத்தம்.சாதி மதம் கடந்து கலந்து காய்ந்த இரத்தம். ஊர்கூடி வடமிழுக்கிறோம், தேர் நகரவில்லை கைகள் சோர்ந்து நம்பிக்கை இற்று விழும் முன் வா! உன் கரகரத்த குரல் வாளெடுத்து எழுத்துக் கேடயம் ஏந்திவா! வீதிகளெங்கும் காத்திருக்கிறோம் இரட்சகனுக்காக.” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.