வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (03/06/2018)

கடைசி தொடர்பு:15:10 (03/06/2018)

`மகள் திருமணத்தில் ஜெயலலிதா படத்துக்கு உரிய மரியாதை தரவில்லை!’ - நவநீதகிருஷ்ணன் எம்.பியைச் சுற்றும் சர்ச்சை

தனது மகள் திருமண விழாவின் போது ஜெயலலிதா படத்தை தரையில் வைத்து அவருக்கு உரிய மரியாதை தர தவறி விட்டார் நவநீதகிருஷ்ணன் என அதிமுக நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர். 

அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினரும், கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளருமான நவநீத கிருஷ்ணன் மகள் திருமணம் இன்று தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில் திருமண மண்டபத்திற்கு வெளியே ஜெயலலிதா படத்தை போட்டுப் பிரமாண்ட பிளக்ஸ் வைத்து விட்டு நுழைவாயிலில் ஜெயலலிதா படத்தை கீழே வைத்து அவருக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை என விம்முகின்றனர் ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள்.

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள திருமணம் மண்டபம் ஒன்றில் அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினரும், கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளருமான நவநீதகிருஷ்ணன் மகள் திருமணம் இன்று  நடைபெற்றது. இதற்காக வழி நெடுகிலும் அதிமுக கொடிகள் பறக்கவிடப்பட்டன. அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் என அனைவரையும் வரவேற்று மெகா சைஸ்ஸில் ஜெயலலிதாவின் படத்தை போட்டு 50க்கும் மேற்பட்ட பிளக்ஸ்கள் நவநீதகிருஷ்ணன் வைத்திருந்தார்.

மண்டபத்திலும் பூக்களால் பிரமாண்ட அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது. அனைவரும் உள்ளே செல்லும் இடத்தில் அரண்மனை போல் அலங்கார வளைவும் வைத்திருந்தனர். அதன் பக்கவாட்டில் மணமக்கள் பெயர் எழுதப்பட்ட அலங்கார போர்டு வைக்கப்பட்டிருந்தது. அதற்குக் கீழே தரையில் ஜெயலலிதாவின் படத்தை தரையில் சாய்க்கப்பட்டவாறு போல் ஜெயலலிதாவின் படம் வைக்கப்பட்டிருந்தது. இது பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைத்தது. அப்போது,  ``ஜெயலலிதா இருக்கும் போது அவருக்கான மரியாதையே வேறாக இருந்தது. இப்போதும் அவருக்கு உண்மையாக இருப்பவர்கள் அவர் உயிருடன் இருந்த போது எப்படிக் கொடுத்தார்களோ அதையே இப்போதும் கட்சி நிகழ்ச்சிகளில் அவர் படத்தை வைத்துக் கொடுக்கின்றனர். 

நவநீதகிருஷ்ணன்

ஆனால் இவர் பெயர் அளவிற்கு மட்டுமே ஜெயலலிதா படத்தை வைத்திருக்கிறார் என ஆதங்கத்துடன் சொன்ன அம்மாவின் விசுவாசிகள் மேலும் தொடர்ந்தனர். இதே போல் மண்டபத்தின் உள்ளேயும் மிகச்சிறிய அளவிலான ஜெயலலிதா படத்தை தான் வைத்திருந்தார். அம்மா அவருக்கு மிகப்பெரிய பதவிகளை தந்தார். அரசியல் பிரபலங்கள், நீதிபதிகள், அனைத்துக் கட்சிகளை சார்ந்த  நிர்வாகிகள் என முக்கியஸ்தர்கள் பலர் வந்த இடத்தில் ஜெயலலிதா படத்தை மலர்களால் அலங்கரித்து வைக்காமல் நவநீதகிருஷ்ணன் இப்படிச் செய்து விட்டாரே என்பதுதான் எங்களுக்கு வேதனை" என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க