`மோடி அரசுக்கு அதிக நிதி வழங்கியுள்ளது வேதாந்தா குழுமம்' - சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

``மோடி அரசுக்கு, அதிக நிதி வழங்கிய நிறுவனங்களில் வேதாந்தா குழுமம் முக்கிய பங்கு வகிக்கிறது.ஆயிரம் கோடி வரை நிதி வழங்கியுள்ளனர்'' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டி உள்ளார். 

சீத்தாராம் யெச்சூரி


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரில் சிலரின் வீடுகளுக்கு இன்று நேரில் சென்று ஆறுதல் கூறினார். பின்னர், காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பின் செய்தியாளர்களிடம் பேசிய சீதாராம் யெச்சூரி,  ``தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராடும் மக்களை ஒடுக்கும் நோக்கிலும், ஆலையை எதிர்த்து இனிமேல் மக்கள் போராடக்கூடாது என்ற நோக்கிலும் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். போராட்டக்காரர்களைக் கொன்று குவிக்கும் நோக்கில்தான் இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்தது. கலவரத்தை ஒடுக்க போலீஸார் முறையான எந்த வழிகளையும் பின்பற்றாமல் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் இடுப்புக்கு மேல் நெஞ்சுப் பகுதியில்தான் குண்டு பாய்ந்துள்ளது. அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர்.

சரியான வழிமுறையைப் பின்பற்றினால் போலீஸாரும் காயமடைந்திருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு எந்தக் காயங்களும் இல்லை. கலவரத்தின்போது பணியிலிருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். அதன் பிறகே நீதி விசாரணை துவக்க வேண்டும். எஸ்.பி கலெக்டர் ஆகியோரை பணிமாற்றம் செய்திருப்பது மட்டும் தீர்வாகாது. 2014-ம் ஆண்டுக்குப் பிறகு மோடி அரசுக்கு, அதிக நிதி வழங்கிய நிறுவனங்களில் வேதாந்தா குழுமம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆயிரம் கோடி வரை நிதி வழங்கியுள்ளனர். விதிமுறைகளையும் மீறி ஆலை இயங்க மத்திய அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து பணியில் உள்ள நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும். கடந்த 4 ஆண்டுகளில் சாதாரண பொதுமக்கள் உயிரிழந்தபோது எந்தவித இரங்கலையும் பிரதமர் மோடி தெரிவித்ததில்லை. தூத்துக்குடி சம்பவத்தில் 13 பேர் வரை உயிரிழந்துள்ள செய்தி தெரிந்தும்,  இதுவரை அவர் இரங்கல் தெரிவிக்காதது வேதனை அளிக்கிறது. இந்த ஆலை மூடப்பட மாநில அரசு அரசாணை வெளியிட்டு, ஆலைக்குச் சீல் வைத்துள்ளது. ஆனால், இது நிரந்தரமாக மூடப்பட்டதாக எடுத்துக் கொள்ள முடியாது. நிரந்தரமாக மூடப்படுவதற்கான சட்ட நடவடிக்கைகளை முழுமையாக எடுக்கப்பட வேண்டும். இந்த ஆலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு, ஆலைத் தரப்பிடமிருந்து உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்படும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!