புதிய சாலைக்கு கல்தா.. பழைய சாலைக்கு பட்டி டிங்கரிங்.. கோவை பழங்குடி கிராம பரிதாபங்கள்

கோவையில், பழங்குடி கிராமத்தில் தார் சாலை போடுவதில் முறைகேடு நடந்துள்ளது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சாலை

கோவை மாவட்டம், ஆனைகட்டியைச் சுற்றி ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன. மலைப் பிரதேசம் என்பதால், இங்குப் போடப்படும் சாலைகள் விரைவிலேயே குண்டும், குழியுமாக ஆகிவிடுகிறது. இந்நிலையில், ஆனைகட்டி அருகே, ஆலமரமேடு பகுதியில் இருந்து பணப்பள்ளி வரை 60 லட்சம் மதிப்பில், சுமார் 5 கி.மீ-க்கு தார் சாலை போடும் பணிகள் நடந்து வருகிறது. முறைப்படி சாலைப்போட்டால், காசு பார்க்க முடியாது என்பதால், பெயருக்குச் சாலைக்கு "பட்டி, டிங்கரிங்" பார்ப்பதாகப் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறுகையில்,  ``ஆலமரமேடு, கொண்டனூர், கொண்டனூர் புதூர், பணப்பள்ளி ஆகிய பகுதிகளில் சுமார் 2,000 பழங்குடி மக்கள் வசித்து வருகிறோம். இங்கிருக்கும் பலரும், செங்கற்சூலை போன்ற கூலி வேலை செய்பவர்கள்தான். இந்தச் சாலையில், நாங்கள் தினசரி சென்று வருவதற்கே சிரமமாக இருக்கிறது. இந்நிலையில், புதிதாகச் சாலை போடுகிறோம் எனச் சொல்லி, பழையே சாலையைச் சுத்தம் செய்துவிட்டு, அதன் மீது ஜல்லி கற்களை போட்டுச் சமன் செய்து வருகின்றனர். பங்கு சரியாக செல்வதால், அதிகாரிகளும் இதைக் கண்டுகொள்வதில்லை" என்றனர்.

இதுகுறித்து விளக்கம் கேட்க கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ ஆறுகுட்டியை தொடர்பு கொண்டோம். ஆனால், அவர் நமது அழைப்பினை ஏற்கவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!