வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (03/06/2018)

கடைசி தொடர்பு:18:00 (03/06/2018)

`27 ரன்களில் மலேசியாவைச் சுருட்டிய இந்திய மகளிர் அணி!’ - 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

மகளிர் ஆசியக் கோப்பை டி20 தொடரின் முதல் போட்டியில் மலேசிய அணியை 142 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி அசத்தல் வெற்றி பெற்றது. 

இந்திய மகளிர் அணி வீராங்கனை மிதாலி ராஜ்

Photo Credit: Twitter/@ACCMedia1

 இந்தியா, மலேசியா, இலங்கை, பாகிஸ்தான், தாய்லாந்து உள்ளிட்ட அணிகள் மோதும் மகளிர் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் மலேசியாவில் நடைபெறுகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் போட்டியை நடத்தும் மலேசிய அணியும், ஆறு முறை சாம்பியனுமான இந்திய அணியும் மோதின. கோலாலம்பூர் கினாரா அகாடமி ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்தது. முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ், 69 பந்துகளில் 97 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மலேசியா தரப்பில் அய்னா ஹஷிம் மற்றும் நூர் ஜக்காரியா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

170 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மலேசிய அணிக்கு, இந்திய மகளிர் அணியின் கடும் நெருக்கடி கொடுத்தனர். தொடக்க ஆட்டக்காரர்களான யுர்சினா யாகூப் மற்றும் கிறிஸ்டினா பேரெட் ஆகிய இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். மலேசிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்திய மகளிர் அணியின் சிறப்பான பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல், மலேசிய அனி 13.4 ஓவர்களில் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் ஒரு வீராங்கனை கூட ஒற்றை இலக்க ஸ்கோரைத் தாண்டவில்லை. ஷாஷா ஆஷ்மி எடுத்த 9 ரன்கள்தான் மலேசிய தரப்பில் அதிகபட்ச ஸ்கோர். கேப்டன் வின்ஃப்ரட் துரைசிங்கம் 21 பந்துகளைச் சந்தித்து 4 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் பூஜா வஸ்ட்ராக்கர் 3 விக்கெட்டுகளும், பூனம் யாதவ் மற்றும் அனுஜா பாட்டீல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 97 ரன்கள் குவித்த ஆட்டமிழக்காமல் இருந்த மிதாலி ராஜ், பிளேயர் ஆஃப் தி மேட்ச்சாகத் தேர்வு செய்யப்பட்டார்.