வெளியிடப்பட்ட நேரம்: 16:14 (03/06/2018)

கடைசி தொடர்பு:19:41 (05/06/2018)

’விடுமுறை முடிந்தது; எழுந்து வாருங்கள் கலைஞரே!’ – கருணாநிதிக்கு சாமான்ய இளைஞனின் கடிதம்! #Karunanidhi95

’விடுமுறை முடிந்தது; எழுந்து வாருங்கள் கலைஞரே!’ – கருணாநிதிக்கு சாமான்ய இளைஞனின் கடிதம்! #Karunanidhi95

கருணாநிதி

மதிப்புக்குரிய கருணாநிதி அவர்களுக்கு,

இந்தக் கடிதம், 90-களில் பிறந்த இளைஞன் ஒருவனால், 95 வயது அரசியல் தலைவர் ஒருவருக்குத் தமிழில் எழுதப்படுகிறது. நீங்களோ, உங்கள் இயக்கமோ இல்லையென்றால் இந்தக் கடிதம் ஹிந்தியில் எழுதப்பட்டிருக்கக்கூடும்; எழுதப்படாமலும் இருந்திருக்கலாம். எங்கள் தலைமுறைக்குத் திராவிட இயக்கங்கள் கடத்தித் தந்த பெரும் சொத்து, தமிழ்; அதன் காவலாளியாக இருந்தவர் நீங்கள்.

திராவிட முன்னேற்றக் கழகம் ஏறத்தாழ 50 ஆண்டுகளைக் கடந்த பிறகுதான் இன்றைய இளைஞர்களாகிய நாங்கள் பிறந்தோம். நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது, எங்களுக்குத் தெரிந்த அரசியல்வாதிகள் என்றால் இருவர் மட்டுமே. ஒருவர் கருணாநிதி; மற்றொருவர் ஜெயலலிதா. ஊர்களில் கட்சிப் பொதுக்கூட்டம் நடக்கும் நேரங்களில், எந்தக் கட்சியின் கூட்டம் என்பதை தூரத்தில் இருந்தே சொல்லிவிடும் குழந்தைகளாக நாங்கள் இருந்தோம். அ.இ.அ.தி.மு.க. பொதுக்கூட்டம் என்றால், எம்.ஜி.ஆர் பாடல் ஒலித்துக்கொண்டிருக்கும். தி.மு.க. என்றால், நாகூர் ஹனிபா பாடல் ஒலிக்கும். இவ்வளவுதான்.

தி.மு.க. பொதுக்கூட்டங்களில் நாகூர் ஹனிபா, ‘கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே’ என்று பாடத் தொடங்கிவிட்டால், தொண்டர்கள் கரைவேட்டியை ஒரு கையில் மடித்துக்கொண்டு புறப்படுவதும், மறு கையில் கறுப்பு, சிவப்புக் கொடியுடன் உற்சாகமாக நடைபோடுவதும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அந்தக்  காட்சிகள் நிரம்பியது எங்கள் பால்ய பருவம். அந்தப் பாடலின் தொடக்கமே உங்கள் வாழ்வை மாற்றியமைத்த போராட்டத்தை உணர்த்தும்.

இன்று அரசியலுக்கு வந்திருக்கும் நடிகர், ‘போராட்டம் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்’ என்கிறார். கல்லக்குடியின் பெயர் ‘டால்மியாபுரம்’ என்று மாற்றப்படக் கூடாது என்று ரயில் தண்டவாளத்தின்மீது படுத்து, தாங்கள் எதிர்ப்புப் போராட்டம் நடத்தி வென்று காட்டியதை அவர்கள் மீள்வாசிப்பு செய்வார்கள் என நம்புகிறோம்.

‘பராசக்தி’ திரைப்படத்தில் நீங்கள் பேசிய அரசியல் உங்கள் நிஜ வாழ்க்கையிலும் பிரதிபலித்தது. திரைப்படங்களில் ஒரு கருத்து, நிஜ வாழ்க்கையில் நேரெதிரான கருத்தையும் நீங்கள் முன்வைக்காததை இப்போது நினைத்துப் பார்க்கிறோம். ‘நிலம் உங்களுக்கு அதிகாரம்; நிலம் எங்களுக்கு வாழ்க்கை’ என்று தற்போது ட்ரெண்ட் ஆகி வரும் கருத்துக்கு, முன்னோடியாக நீங்கள் கொண்டுவந்த ‘நில உச்சவரம்பு’ சட்டத்தை வசதியாக மறந்துவிட்டோம்.

நீங்கள் அரசியல் களத்திலிருந்து ஒன்றரை ஆண்டுகளாக ஒதுங்கியிருக்கிறீர்கள்; உங்கள் பிரதான அரசியல் எதிரி ஜெயலலிதா இறந்து, ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த இடைவெளியில், ‘கழகங்கள் இல்லாத தமிழ்நாடு’ என்று முழக்கம் வைக்கிறது ஒரு தேசியக் கட்சி. ‘மய்யம்’ என்கிறார் ஒரு நடிகர்; ‘ஆன்மிக அரசியல்’ என்கிறார் மற்றொரு நடிகர். நீங்கள் அரசியல் களத்தில் தற்போது இருந்திருந்தால், இவர்களுக்கு உங்களின் சாதுர்யமான பதில்கள் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறோம்.

தற்போது தமிழ்நாட்டில் ஆட்சிசெய்து வரும் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசுக்கு மிகவும் இணக்கமாக இருப்பது அனைவரும் அறிந்தது. மாநில உரிமைகளை மத்திய அரசிடம் அடமானம் வைக்கப்படும் இந்தக் காலகட்டத்தில், அன்றைய தி.மு.க. முன்வைத்த ‘மத்தியில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி’ என்ற முழக்கத்தின் தேவையை இப்போது உணர்கிறோம்.

‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என்று தற்போது தொடர்ச்சியாகத் திராவிட இயக்கங்கள் மீது குற்றச்சாட்டுகள் பரப்பப்படுகின்றன. எங்கள் தலைமுறையில் பலர், அந்தக் குற்றச்சாட்டுகளை நம்பி, ஏற்கத் தொடங்கிவிட்டனர். ‘தமிழ்நாடு முன்னேறவேயில்லை’ என்ற குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து, திராவிட இயக்கங்களை குற்றவாளியாக்கும் போக்கும் தொடர்ந்து நடந்துவருகின்றன.

இந்திய மாநிலங்களில் நிலப்பரப்பில் மற்ற மாநிலங்களைவிடச் சிறியது தமிழ்நாடு. ஆனால், வளர்ச்சிப் பாதையில் தமிழ்நாடு அடைந்த தொலைவை மற்ற மாநிலங்கள் எட்ட இன்னும் பல ஆண்டுகள் ஆகும். அதற்கு நீங்கள் கொண்டுவந்த சட்டங்களும் திட்டங்களும் முதன்மைக் காரணங்கள்.

வருவாய்த் துறையின் சாதாரண ரெய்டுக்கே பயப்படும் ஆட்சியை நாங்கள் அனுபவித்து வருகிறோம். ஆனால், இந்திரா காந்தி பிரகடனப்படுத்திய நெருக்கடி நிலையை எதிர்த்து நீங்கள் களமாற்றியதை நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது.

மாநில சுயாட்சியையும் சமூக நீதியையும் தன் இரண்டு கண்களாகக் கருதியது அன்றைய திராவிட முன்னேற்றக் கழகம். இந்த இரண்டு தன்மைகளின் அடிப்படைகளையும் உடைத்து வந்திருக்கிறது ‘நீட்’ தேர்வு. சமமற்ற இந்தச் சமூகத்தில், ஊர்ப்புற மாணவர்களைப் புறக்கணித்து மத்திய அரசால் ‘நீட்’ தேர்வு நடத்த முடிகிறது. ஆனால், திராவிட இயக்கங்கள் தொடர்ந்து அனைத்து மாணவர்களும் கல்வி பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தந்தது. நீங்கள் எம்.ஜி.ஆரோடும், ஜெயலலிதாவோடும் போட்டிபோட்டு மாணவர்கள் நலனில் ஒவ்வோர் ஆட்சியிலும் கவனமாக இருந்தீர்கள். தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீடு தரப்பட்டிருப்பதே அதன் சான்று.

பெரியாரின் மரபை, அண்ணா தேர்தல் அரசியலுக்குள் எடுத்துவந்தார். அண்ணாவின் கொள்கைகளை ஒரு முதலமைச்சராக உங்களால் முடிந்த வரையறைக்குள் பரப்பி, தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்றியுள்ளீர்கள். ஆனால், நிச்சயமாக தி.மு.க. கருத்தியல்ரீதியாக, சாதிக்கு எதிராக எங்கள் தலைமுறையைத் தயார் செய்யவில்லை என்பதை எங்களால் சொல்ல முடியும்.

இந்தியாவின் அனைத்துக் கட்சிகளின் மீதும் பிரதானமாக வைக்கப்படும் குற்றச்சாட்டு, ஊழல். தி.மு.க-வும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், இந்தியாவில் சாதிக்கு எதிராகத் தோற்றுவிக்கப்பட்டு, தொடர்ந்து இயங்கிவரும் இயக்கமாகத் திராவிட இயக்கம் இருக்கிறது. திராவிட இயக்கத்திலிருந்து தோன்றிய தி.மு.க. உங்கள் காலத்தோடு சாதிக்கு எதிராகப் பேசுவதை நிறுத்திக்கொண்டது. சுய மரியாதை முழக்கங்களைத் தி.மு.க. தொண்டர்கள் முன்னெடுத்ததைப் பார்த்த கடைசித் தலைமுறை நாங்களாக இருக்கப் போகிறோம் என்று பயமாக இருக்கிறது.

கடந்த காலத்தில், தி.மு.க. தொண்டர்களால் நிரம்பியிருந்தது; தற்போது தி.மு.க. பல கட்சிக்காரர்களால் நிரம்பி இருக்கிறது. கட்சிக்காரர்களால் தொண்டர்கள் ஆகவே முடியாது. தொண்டர் படை நிரம்பிய தி.மு.க.-தான் சமூக நீதியை வென்றது; சுய மரியாதையைப் பெற்றுத் தந்தது. இந்த விமர்சனத்தின்மீது நிச்சயம் உங்களுக்கு அக்கறை இருக்கும்.

ஆளும் கட்சியாக இருந்தபோதும் சரி, எதிர்க் கட்சியாக இருந்தபோதும் சரி, உங்கள் செயல்பாடுகள் மக்களை நோக்கி இருந்தன. உங்கள்மீது எங்கள் தலைமுறைக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம்; வாரிசு அரசியல் மீது அதிருப்தி இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், இன்றைய தலைவர்களுடன் உங்களை ஒப்பிடவே முடியாது. ஆக நாங்கள் மீண்டும் கருணாநிதி எங்கள் தலைமுறைக்காகப் பணியாற்றுவதையே காண விரும்புகிறோம். 

ஆகவே, பிறந்தநாள் கொண்டாட்டங்களோடு விடுமுறையை முடித்துவிட்டு, எழுந்து வாருங்கள் தலைவரே!

இப்படிக்கு,

தமிழ்நாட்டின் சாமான்ய இளைஞன். 


டிரெண்டிங் @ விகடன்