`துப்பாக்கிச்சூடு சம்பவம்!’ தூத்துக்குடியில் விசாரணையைத் தொடங்கிய தேசிய மனித உரிமை ஆணையக்குழு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களிடம் தேசிய மனித உரிமை ஆணையக் குழுவினர் விசாரணையை இன்று தொடங்கினர். 

விசாரணை

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உற்பத்தி ஆலையினை மூட வலியுறுத்தி கடந்த 22ம் தேதி நடந்த முற்றுகை போராட்டத்தில் கலவரம் வெடித்தது. கலவரத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தினர் நேரடி விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என டெல்லி உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து தேசிய மனித உரிமை ஆணையத்தைச் சேர்ந்த புபுல் புட்டா பிரசாத் தலைமையில் ராஜிவிர், நிதின், தியாகி மற்றும் லால் ஆகிய 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை தூத்துக்குடி வந்தனர். 

விசாரணை

அவர்கள் நேற்று இரவு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சேதமடைந்த பகுதிகள், அரசு வாகனங்களைப் பார்வையிட்டனர். இன்று காலையில் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களிடம் தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டனர். 

முதலில்  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்வழக்கறிஞர் எம்.ராஜராஜன், அவரிடம் இருந்த ஆவணங்களைத் தாக்கல் செய்தார்.  தொடர்ந்து உயிரிழந்த குடும்பத்தினரிடம், குழுவினர் விசாரணை  நடத்தி வருகின்றனர். மேலும், இந்தக் குழுவில் உள்ள 2  பேர்  தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருபவர்கள் ஒவ்வொருரையும் தனித்தனியாகச் சந்தித்து  விசாரணை நடத்தி  வருகின்றனர்.   

விசாரணை

தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடைபெற்ற பகுதிகள், தடியடி கலவரம் நடந்த பகுதிகளை ஆய்வு செய்கின்றனர். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோ காட்சிகளையும் போலீஸாரிடமிருந்து பெற்று ஆய்வு செய்து வருகின்றனர். இதில் மனித உரிமைகள் எந்த அளவில் மீறப்பட்டுள்ளது?. துப்பாக்கிச் சூட்டின் பின்னணி என்ன என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த குழுவினர் வரும் 7ம் தேதி வரையிலும் தூத்துக்குடியில் விசாரணை மேற்கொள்வார்கள் என்றும், 2 வாரத்திற்குள் அவர்கள் தங்களது அறிக்கையினை தாக்கல் செய்வார்கள் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதேபோல, நேற்று முழுவதும் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் மூலம் அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவினரும் ஆய்வு செய்தது குறிப்பிடத் தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!