வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (03/06/2018)

கடைசி தொடர்பு:20:00 (03/06/2018)

சுசீந்திரம் முன்னுதித்த நங்கை கோயிலைப் புதுப்பிக்க ஆர்வம் கொண்ட சுரேஷ்கோபி!

சுசீந்திரம் வந்திருந்த மலையாள நடிகர் சுரேஷ்கோபி முன்னுதித்த நங்கை கோயில் முக மண்டபத்தை புதுப்பிப்பது குறித்து கோயில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

சுசீந்திரம் வந்திருந்த மலையாள நடிகர் சுரேஷ்கோபி முன்னுதித்த நங்கை கோயில் முக மண்டபத்தை புதுப்பிப்பது குறித்து கோயில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

சுரேஷ் கோபி

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற ஆன்மீக தலம் சுசீந்திரம். மலையாள நடிகரும் எம்.பி.யுமான சுரேஷ்கோபி சுசீந்திரம் தாணுமாலையசுவாமி கோயிலுக்கு வந்திருந்தார். முதலில் சுவாமி தரிசனம் செய்தவர், பின்னர் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை கோயில் முன் மண்டபத்தை புதுப்பிப்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மண்டபம் புதுப்பிப்பதற்கான எஸ்டிமேட் தயார் செய்துவிட்டு தகவல் கொடுத்தால், நன்கொடை அளிப்பதாக சுரேஷ்கோபி தெரிவித்துள்ளார். சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோவில் முருகன் மற்றும் பத்மநாபபுரம் சரஸ்வதி தேவி ஆகிய தெய்வங்கள் நவராத்திரி விழாவுக்காக ஆண்டுதோறும் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலுக்குச் செல்வது வழக்கம்.

சுரேஷ்கோபி

கடந்த நவராத்திரி விழாவுக்கு முன்னுதித்த அம்மன் திருவனந்தபுரம் புறப்பட்டுச் செல்லும் நிகழ்ச்சிக்காக சுரேஷ்கோபி சுசீந்திரம் வந்திருந்தார். அப்போது நவராத்திரி விழா கமிட்டியினர் முன்னுதித்த நங்கை அம்மன் கோயிலை புதுப்பிக்க வேண்டியதன் அவசியம் குறித்து சுரேஷ்கோபியிடம் கூறியிருந்தனர். அதை ஒட்டியே சுரேஷ்கோபியின் சுசீந்திரம் வருகை இருந்தது. மேலும், இக்கோயிலின் முன்பு நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து உயர்கோபுர மின் விளக்கு அமைக்க சுரேஷ்கோபி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.