`லொடுக்கு பாண்டிகளுக்கு சுளுக்கு காத்திருக்கு’ - கருணாஸை தாக்கும் நமது அம்மா நாளிதழ்!

கருணாஸ், தமிம்முன் அன்சாரி, தனியரசு ஆகியோரை விமர்சிக்கும் விதமாக `லொடுக்கு பாண்டிகளுக்கு சுளுக்கு காத்திருக்கு' என்ற தலைப்பில், நமது அம்மா நாளிதழில் கட்டுரை வெளியாகியுள்ளது.

கருணாஸ்

நடிகரான கருணாஸ் கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்து திருவாடானை தொகுதியில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதேபோல் தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோரும் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இவர்கள் ஜெயலலிதா மறைவுக்குப் பின், சசிகலா அணிக்குச் சென்றனர். ஆனால், தற்போது தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இதற்கிடையே, சமீபத்தில் தி.மு.க நடத்திய மாதிரி சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்ற கருணாஸ், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார். மேலும், கூவத்தூரில் நடந்த ரகசியத்தை வெளியிடுவேன் எனக் கூறி அதிரவைத்தார். அவரது இந்தப் பேச்சை அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளேடான `நமது அம்மா நாளிதழ்’ தற்போது விமர்சித்துள்ளது.  

``லொடுக்கு பாண்டிகளுக்கு சுளுக்கு காத்திருக்கு’’ என்ற பெயரில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில்,``இரட்டை இலைச் சின்னத்தாலும், ஈகைக்கும் வாகைக்கும் இலக்கணம் வகுத்த அ.தி.மு.க தொண்டர்களின் இமைதுஞ்சா உழைப்பாலும் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினரான மாற்றுக்கட்சியைச் சேர்ந்த சில நன்றிகெட்ட பேர்வழிகள் சிலர் தி.மு.க நடத்திய கோமாளி மாதிரி சட்டமன்றத்துக்குச் சென்று பஃபூன் வேஷம் கட்டியிருக்கிறார்கள். அது சரி, பொன்மனதையின் பூ முகத்துக்காகவும் அவரது பொற்கரங்கள் சுட்டிக்காட்டிய பரிந்துரைக்காகவும், ஒட்டுப் போட்டு வெற்றிபெறவைத்த மக்கள், இன்றைக்கு ஆதாயத்துக்காக அணி தாவி இருக்கும் இந்த லொடுக்கு பாண்டிகளை இனி எப்படி தொகுதிக்குள் தலைகாட்ட விடுவார்கள்... கழகம் மன்னித்து விடலாம்... அல்லது சட்டத்தின்படி தண்டித்து விடலாம்’’ என்றும், நன்றி மறந்தவர்களுக்கு மக்கள் உரிய பாடத்தைப் புகட்டுவார்கள் என்றும் அந்த கட்டுரையில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!