வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (03/06/2018)

கடைசி தொடர்பு:08:09 (04/06/2018)

வேல்முருகனை விடுதலைசெய்யக் கோரி வரும் 8-ம் தேதி ஆர்ப்பாட்டம் - அனைத்துக் கட்சிகள் தீர்மானம்

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை விடுதலை செய்யக் கோரி வரும் 8-ம் தேதி கடலூரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

தமிழக வாழ்வுரிமை கட்சியின் நெய்வேலி அலுவலகத்தில் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில நிர்வாகிகள் திருமால்வளவன், ராயநல்லூர் கண்ணன், ஜம்புலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாநில பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெங்கடேசன், மதிமுக ராமலிங்கம், மனிதநேய மக்கள் கட்சி இப்ராகிம், தமிழ்நாடு முஸ்ஸிம் முன்னேற்றக் கழக  அமீர் பாட்ஷா, தமிழ்த் தேசிய பேரியக்க எல்லாளன், நாம் தமிழர் கட்சி சாமிரவி, காங்கிரஸ் கட்சி சந்திரசேகரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மணிவேல், மீனவர் விடுதலை வேங்கை சக்திவேல், மக்கள் போராட்ட மையம் கென்னடி விடுதலைத் தமிழ் புலிகள் ஆதவன், எஸ்.டி.பி.ஐ ரியாஸ்ரகுமான் மற்றும் ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், விவசாய சங்க கூட்டமைப்பு, மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்பை சேர்ந்தவகளும் கலந்து கொண்டனர். இதில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்திருப்பதை கண்டித்தும் அவரை விடுதலை செய்ய கோரி வரும் 8ம் தேதி கடலூரில் அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்து இயக்கங்களை அழைத்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.