வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (03/06/2018)

கடைசி தொடர்பு:21:30 (03/06/2018)

`சொல்லவேண்டியதை நாக்பூரில் சொல்வேன்!’ - ஆர்.எஸ்.எஸ். கூட்டம் குறித்து மௌனம் கலைத்த பிரணாப்

ஆர்.எஸ்.எஸ். நடத்தும் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு எழுந்துள்ள எதிர்ப்புக் குறித்து குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி மனம் திறந்துள்ளார். 

பிரணாப் முகர்ஜி


நாக்பூரில் வரும் 7-ம் தேதி நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளும்படி குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அந்த அமைப்பு அழைப்பு விடுத்தது. அந்த அழைப்பை பிரணாப் முகர்ஜி ஏற்றுக்கொண்டார். காங்கிரஸ் பின்னணி கொண்ட பிரணாப், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அழைப்பை ஏற்றது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கூடாது என பிரணாப் முகர்ஜியைக் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். இதுதொடர்பாக அவருக்குக் கடிதமும் பலர் எழுதினர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷும் பிரணாப் முகர்ஜிக்குக் கடிதம் எழுதியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி கலந்துகொள்ளக் கூடாது என அவர் கருத்துத் தெரிவித்துள்ளார். 

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் இதுகுறித்து கூறுகையில், ``ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விடுக்கப்பட்ட அழைப்பை அவர்  (பிரணாப் முகர்ஜி) ஏற்றுக்கொண்டார். இனிமேல் அதுகுறித்து பேச வேண்டியதில்லை. இதில், முக்கியமான விஷயம் என்னவென்றால், ஆர்.எஸ்.எஸ்-ஸின் அழைப்பை நீங்கள் ஏற்றுக் கொண்டீர்கள். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவர்களது (ஆர்.எஸ்.எஸ்) கருத்தியலில் உள்ள பிழைகளை நீங்கள் சுட்டிக்காட்டுங்கள்’’ என்று கருத்துத் தெரிவித்திருந்தார். 

இந்தநிலையில், ஆர்.எஸ்.எஸ். மாநாட்டில் கலந்துகொள்ளுவதற்கு எழுந்த எதிர்ப்புகள் குறித்து பிரணாப் முகர்ஜி கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்தார். தற்போது, அதுகுறித்து அவர் கருத்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ``நான் என்ன சொல்ல வேண்டுமோ, அதை நாக்பூரில் சொல்வேன். இதுதொடர்பாக தொலைபேசி அழைப்புகள், கடிதங்கள் வாயிலாக பல்வேறு வேண்டுகோள்கள் எனக்கு வந்தன. ஆனால், அவற்றுக்கு நான் பதிலளிக்கவில்லை’’ என்று அவர் கூறியிருக்கிறார். இந்த தகவலை வங்காள மொழியில் வெளிவரும் `ஆனந்த் பஜார் பத்திரிகா’ என்ற நாளிதழ் வெளியிட்டுள்ளது.