வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (03/06/2018)

கடைசி தொடர்பு:23:30 (03/06/2018)

`60 லட்சம் போலி வாக்காளர்களா?’ - விசாரணைக்கு உத்தரவிட்ட தேர்தல் ஆணையம்

மத்தியப்பிரதேச மாநில வாக்காளர் பட்டியலில் சுமார் 60 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி புகார் அளித்த நிலையில், அதுதொடர்பாக விசாரணை நடத்த தலைமைத் தேர்தல் ஆணையம் இரண்டு குழுக்களை அமைத்துள்ளது. 

தேர்தல் ஆணையம்

மத்தியப்பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு வரும் நவம்பரில் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆட்சியைத் தக்கவைக்க பா.ஜ.கவும், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் தீவிரமாகக் களப்பணியாற்றி வருகின்றன. இந்தநிலையில், தலைமைத் தேர்தல் ஆணையத்துக்குச் சென்ற கமல்நாத், ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர், அம்மாநிலத்தில் சுமார் 60 லட்சம் போலி வாக்காளர்கள் இருப்பதாகப் புகார் அளித்தனர். இதுகுறித்து கமல் நாத் மற்றும் சிந்தியா ஆகியோர் செய்தியாளர் சந்திப்பின் போது போலி வாக்காளர்கள் குறித்த சில ஆதாரங்களை வெளியிட்டனர். குறிப்பாக, மத்தியப்பிரதேசத்தின் போஜ்பூர் தொகுதியில் ஒரே பெண்ணின் பெயர், 26 வெவ்வேறு வாக்குச் சாவடிகளில் இடம்பெற்றிருந்தது. 

கமல்நாத் கூறுகையில், ``மத்தியப்பிரதேசத்தில் 60 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவை தவறுதலாகச் சேர்க்கப்படவில்லை. பா.ஜ.கவின் வெற்றிக்காகவே இந்த தவறு திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இதற்கான ஆதாரங்களைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்திருக்கிறோம்’’என்றார். ஜோதிராதித்ய சிந்தியா பேசுகையில், ``மாநிலத்தின் 101 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 24.65 லட்சம் போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அதேபோல், மக்கள் தொகைப் பெருக்கம் மற்றும் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு இடையிலான வித்தியாசம் பெரிய அளவில் இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் தொகைப் பெருக்கம் 10 சதவீதமாக இருக்கும் நிலையில், வாக்காளர்களின் எண்ணிக்கை மட்டும் 40 சதவீதம் உயர்ந்தது எப்படி?’’ என்று அவர் கேள்வி எழுப்பினார். 

காங்கிரஸ் கட்சியின் புகாரை அடுத்து, போலி வாக்காளர்கள் குறித்து விசாரிக்க தலைமைத் தேர்தல் ஆணையம் 2 குழுக்களை நியமித்துள்ளது. அந்த குழுக்கள் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் 7-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.