வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (03/06/2018)

கடைசி தொடர்பு:08:07 (04/06/2018)

குமரி அரசுப் பள்ளி அறிவியல் கூடத்தில் திடீர் தீ விபத்து! - ரூ.3 லட்சம் பொருள்கள் நாசம்!

நாகர்கோவில் ஏழகரம் அரசு உயர்நிலை பள்ளி அறிவியல் கூடத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமடைந்தன.

நாகர்கோவில் ஏழகரம் அரசு உயர்நிலை பள்ளி அறிவியல் கூடத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமடைந்தன.

தீ விபத்து

நாகர்கோவிலை அடுத்த கோட்டார் ஏழகரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. கோடை விடுமுறை முடிந்து நேற்று முன் தினம் இந்த பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. நேற்றும், இன்றும் விடுமுறை விடப்பட்ட நிலையில் இன்று மதியத்துக்கு மேல் பள்ளியின் அறிவியல் ஆய்வுக்கூடத்திலிருந்து திடீரென புகை மண்டலம் கிளம்பியதை அப்பகுதியினர் பார்த்தனர். இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திலிருந்து வீரர்கள் விரைந்து சென்று பார்த்தபோது பள்ளியில் தீ வேகமாக எரிந்துகொண்டிருந்தது. ஓட்டு கட்டடம் என்பதால் தீ வேகமாக பரவியது. தீயணைப்பு வீரர்கள் வேகமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

தீ விபத்து

இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், "திடீரென மின்சாரம் தடைபட்டுவிட்டு சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் மின்சாரம் வந்தது. அதன்பிறகுதான் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பள்ளி அருகே நடந்துகொண்டிருந்த திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர்கள்தான் முதலில் தீ எரிவதை பார்த்தனர். அதன்பிறகு தீயணைப்பு வீரர்கள் வேகமாக செயல்பட்டதால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. விடுமுறை காரணமாக மாணவர்கள் பள்ளிக்கு வராததால் வேறு சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை" என்றனர். அரசு உயர்நிலைப்பள்ளியில் திடீர் தீபத்து ஏற்பட்ட சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை  ஏற்படுத்தியது.