வெளியிடப்பட்ட நேரம்: 20:38 (03/06/2018)

கடைசி தொடர்பு:19:07 (04/06/2018)

`போராட்டங்களை மக்கள் நிறுத்த மாட்டார்கள்; நிறுத்தவும் கூடாது!’ - கமல் பளீச்

கர்நாடக முதல்வர் குமாரசாமியை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நாளைச் சந்திக்கவுள்ளார்.

கமல்ஹாசன்

நீண்ட அரசியல் குழப்பங்களுக்கு பிறகு கடந்த 23ம் தேதி கர்நாடக முதல்வராகக் குமாரசாமி பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்றதும் கர்நாடக சட்டப்பேரவையில் 117 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்தார். பின்னர் முதல் சர்ச்சையாக மக்களின் ஆசீர்வாதத்தால் நான் முதலமைச்சராகவில்லை. ராகுல்காந்தியின் ஆசீர்வாதத்தால்தான் முதல்வரானேன் என்று பேசி அதிரவைத்தார். இருப்பினும், விவசாயிகளுக்கான கடன் 15 நாட்களில் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்து அரசுப் பணிகளை கவனிக்கத் தொடங்கிவிட்டார். 

இதற்கிடையே, ``காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டிருப்பதை நினைத்து கர்நாடக விவசாயிகள் கவலைப்படத் தேவையில்லை என்றும் அவர் பேசியிருப்பது தமிழகத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட இழுபறிக்குப் பின்னர் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்ட உத்தரவு அரசிதழில் வெளியானது. இதனால் தமிழக மக்கள் சற்று நிம்மதியடைந்திருந்த நிலையில், சித்தராமையாவை போலக் குமாரசாமியும் பேசியுள்ளது தமிழக மக்கள் மத்தியில் காவிரி விவகாரத்தில் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை நாளை சந்தித்துப் பேசவுள்ளார். இந்த சந்திப்பின்போது இருமாநில உறவு, காவிரி குறித்து இருவரும் ஆலோசிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக குமாரசாமி பதவியேற்பு விழாவில் கமல்ஹாசன் பங்கேற்று வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

சந்திப்புக்காகப் பெங்களூரு செல்லும் முன்னர் சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``மக்கள் பிரநிதியாக நமக்கு என்ன தேவை என்பதை கேட்கவே பெங்களூரு செல்கிறேன். மக்களின் கருத்துகளையே பிரதிபலிக்கிறேன், நானாக எந்தக் கருத்தையும் கூறுவதில்லை. சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தி.மு.க மீண்டும் பங்கேற்கத் தீர்மானித்துள்ளது வரவேற்கத்தக்க முடிவு. தி.மு.கத் தலைவர் கருணாநிதிக்கு பலமுறை பிறந்தநாள் முடிந்தும் வாழ்த்து கூறியுள்ளேன். இம்முறையும் அப்படியே கூறுவேன்.

காவிரி விவகாரத்தில் தமிழக கட்சிகள் அரசியல் செய்ய வேண்டாம் என்பதுதான் எனது கருத்து. அதை நோக்கித்தான் எனது பயணம் இருக்கும். காலா படம் கர்நாடகாவில் திரையிடுவது குறித்து இரு மாநில திரைப்பட சங்கங்கள் பார்த்துக்கொள்ளும். என்னைப் பொறுத்தவரை தூத்துக்குடியில் பலியானவர்கள் யாரும் சமூக விரோதிகள் கிடையாது. அவர்களை சமூக விரோதிகள் என்று கூறினால், நானும் சமூக விரோதிதான். ரஜினிகாந்த் கூறியது அவர் கருத்து. போராடுவதில் ஒரு தன்மை இருக்க வேண்டும். போராட்டங்களை மக்கள் நிறுத்த மாட்டார்கள்; நிறுத்தவும் கூடாது. ஸ்டெர்லைட் ஆலை எல்லையைக் கடந்து, தனது பேராசையினால் பல தவறுகள் செய்துள்ளது" என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க