வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (03/06/2018)

கடைசி தொடர்பு:10:48 (04/06/2018)

`முடிவெடுக்க இவர்கள் யார்?’ - 'காலா'வுக்கு ஆதரவாகக் குரல்கொடுக்கும் பிரகாஷ் ராஜ்

'கன்னட மக்களுக்கு இது வேண்டும்; இதுவேண்டாம் என முடிவெடுக்க இந்த சமூக விரோதிகள் யார்?' என நடிகர் பிரகாஷ் ராஜ் 'காலா' படத்துக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியுள்ளார். 

பிரகாஷ் ராஜ்

ரஜினி நடித்துள்ள 'காலா' படத்தை கர்நாடகாவில் திரையிடத் தடை விதித்து, அம்மாநில திரைப்பட வர்த்தக சபை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அம்மாநில முதலமைச்சர் குமாரசாமியைச் சந்தித்து ரஜினி ரசிகர்கள் மனு அளித்தனர். இருப்பினும், கர்நாடக மக்கள் 'காலா' படம் வெளியாவதை விரும்பவில்லை என குமாரசாமி கருத்துத் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், 'காலா' படத்தைத் திரையிடுவதற்கு ஆதரவாக, நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ``மனிதனுக்கும் ஆற்றுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இதனால்தான், காவிரி விவகாரம் குறித்துப் பேசுகையில் நாம் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுவிடுகிறோம். காவிரி நதிநீர்ப் பங்கீடுகுறித்துப் பேசும்போதெல்லாம், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநில மக்களின் உணர்வுகளும் இப்படித்தான் இருக்கும். ஆனால், உணர்ச்சிவசப்படுவது மட்டுமே ஒரு பிரச்னைக்குத் தீர்வு காண முடியாது. அந்த விவகாரம்குறித்த நடைமுறையில் நாம் சிந்திக்க வேண்டும். இந்த விவகாரத்தில், இருமாநில அரசுகளும், மத்திய அரசு மற்றும் வல்லுநர் குழுவினருடன் இணைந்து பேசி, நமது விவசாயிகளின் பிரச்னைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். 

இந்தச் சூழலில், 'காலா' திரைப்படத்தை வெளியாகமால் தடுத்து நாம் என்ன செய்யப்போகிறோம்? ரஜினி கூறிய கருத்து நம்மை கடுமையாகப் பாதித்துள்ளது உண்மைதான். அதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறிக்கொண்டு 'காலா' படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என சில அமைப்புகள் கூறிவருகின்றன. இதுதான் கன்னட மக்களான நாம் வேண்டுவது. இந்தக் கேள்விக்கான பதில் நமக்குத் தெரியாது. எப்போதும் நமக்குத் தெரிந்ததில்லை. ஒருவேளை அந்தப் படம் வெளியாகி, அதைப் பார்க்காமல் மக்கள் புறக்கணித்தால், அப்போது நாம் தெரிந்துகொள்ளலாம் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று. ஆனால், மக்கள் சார்பாக இதுபோன்ற சமூகவிரோதிகள் தீர்மானிக்கிறார்கள் நமக்கு எதுவும் தெரிந்துவிடக் கூடாதென்று. 

பிரகாஷ் ராஜ்

மக்களுக்கு இது வேண்டும்; இது வேண்டாம் என முடிவு செய்ய இவர்கள் யார்? நடிகர் கூறிய கருத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லாத தயாரிப்பாளரின் முதலீடு என்னாவது? படத்தில் தங்களது திறமை மற்றும் உழைப்பைக் கொட்டியுள்ள நூற்றுக்கணக்கான டெக்னீஷியன்கள், துணை நடிகர்கள் மற்றும் உழைப்பாளர்கள் பற்றி நினைத்ததுண்டா? அதேபோல, சினிமா போஸ்டர்களை ஒட்டிக்கொண்டும், தியேட்டர்களில் சைக்கிள் ஸ்டாண்டுகளை வைத்துக்கொண்டும் இருப்பவர்கள் முதல், தியேட்டர்களில் கேன்டீன் நடத்துபவர்கள் வரை இருப்பவர்களின் நிலை? விநியோகஸ்தர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் என திரைப்படம் சார்ந்து தங்கள் வாழ்வாதாரத்தை நிர்ணயித்துக்கொண்டவர்கள் பற்றி சிந்திக்க வேண்டும். இவர்கள் அனைவருக்கும் வாழ்வு தரும் சினிமா பிரியர்களின் நிலை? இந்த அசாதாரண சூழலுக்கு சாமான்யன் கொடுக்கும் விலை... வாகனங்கள் எரிப்பு, பொருள்களை அடித்து உடைப்பது, குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாத சூழல் என இந்தப் பட்டியல் முடிவற்றதாக நீளும். இதுபோன்ற சம்பவங்களால், கர்நாடகா மற்றும் தமிழக மக்களிடையிலான நல்லிணக்க சூழல் குலைந்துபோகும் நிலை பற்றிச் சிந்தித்ததுண்டா? நமது உணர்ச்சிகளைத் தவறாகப் பயன்படுத்திக்கொண்ட பின்னர், இந்தச் சமூக விரோதிகள் எங்கு செல்வார்கள்? இதுபோன்ற ஒரு வாய்ப்பு வருவதற்காகக் காத்திருக்கும் அவர்கள், மீண்டும் அசாதாரண சூழலை ஏற்படுத்துவார்கள். இறுதியில் நாமே காயமடைந்து, அந்த காயத்துடன் வாழவேண்டியிருக்கும்’’ என்று பிரகாஷ் ராஜ், தனது பதிவில் தெரிவித்துள்ளார்.