வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (04/06/2018)

கடைசி தொடர்பு:10:33 (04/06/2018)

`பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுத்த இங்கிலாந்து!’ - இரண்டாவது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் வெற்றி

பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்டில், இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 55 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தொடரை சமன் செய்தது. 

இங்கிலாந்து வீரர் ஸ்டூவர் பிராட்

Photo Credit: Twitter/ICC

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, இரண்டு போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் போட்டியில், பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி, ஹீடிங்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, 174 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி, பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 302 ரன்கள் என்ற ஸ்கோருடன் மூன்றாவது நாள் ஆட்டத்தை ஜோஸ் பட்லர் மற்றும் டாம் சாம் கர்ரன் ஆகியோர் தொடங்கினர். ஜோஸ் பட்லர், ஒருமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், மறுமுனையில் இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகள் வரிசையாகச் சரிந்தன. 106.2 ஓவர்களில் இங்கிலாந்து அணி 363 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இது, பாகிஸ்தான் அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட 189 ரன்கள் அதிகம். 

இதையடுத்து, இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு, இங்கிலாந்து பௌலர்கள் கடும் நெருக்கடிகொடுத்தனர். ஆண்டர்சன் வீசிய ஐந்தாவது ஓவரில் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில், தொடக்க வீரர் அசார் அலி ஆட்டமிழந்தார். சிறிதுநேரத்திலேயே ஹரீஷ் சொஹைலும்  8 ரன்களில் வெளியேற, பாகிஸ்தான் அணியின் சரிவு தொடங்கியது. இங்கிலாந்து வீரர்களின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து, முடிவில் 46 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் தரப்பில் இமாம் உல் ஹக் 34 ரன்களும், உஸ்மான் சலாஹுதின் 33 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் மற்றும் டொமினிக் பெஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதன்மூலம், இன்னிங்ஸ் மற்றும் 55 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி, 2 போட்டிகள்கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.