வெளியிடப்பட்ட நேரம்: 01:21 (04/06/2018)

கடைசி தொடர்பு:09:12 (04/06/2018)

``ஜெயலலிதாவுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்று கூறுவது பொய்" - ஜெ. தீபா

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஒருபோதும் தன்னை வெறுக்கவோ, ஒதுக்கவோ இல்லை என்றும், அதுபோன்ற தகவல்களுடன் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என்றும், ஊடகங்கள் உண்மைத்தன்மையை ஆதாரங்களுடன் வெளியிட வேண்டும் என்றும் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ. தீபா தெரிவித்துள்ளார்.

ஜெ.தீபா

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அதுதொடர்பாக விசாரணை நடத்த, ஒருநபர் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகிறார். சசிகலா சார்பில் தாக்கல்செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், ஆணையத்தில் ஆஜராகி சாட்சியம் அளிப்போரிடம் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் விடுத்த கோரிக்கை ஏற்கப்பட்டது. அதன்படி, பலரிடம் குறுக்குவிசாரணை நடந்துவருகிறது.

இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா, தனது அத்தை ஜெயலலிதாவுக்கு தன்னைப் பிடிக்கவில்லை எனத் தெரிவித்து, பத்திரிகைகளில் வெளியான செய்திகளை மறுத்துள்ளார். இதுதொடர்பாக, ஜெ. தீபா வாட்ஸ்அப்பில் ஆடியோ மூலம் விரிவான விளக்கத்தையும் அளித்துள்ளார். 

 அதில், "மறைந்த முன்னாள் முதல்வரும் என்னுடைய அத்தையுமான ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சந்தேகம் தொடர்பாக தற்போது நடைபெறும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில், அவருடைய வழக்கறிஞர் நடத்திவரும் குறுக்கு விசாரணையில், சசிகலா தரப்பில் இதுவரை என்னை அழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் என்னைப் பற்றி என் சகோதரர் தீபக் கூறியதாக பல முன்னணிப் பத்திரிகைகளில் வந்துள்ள செய்திகள் அனைத்தும் முற்றிலும் தவறானவை என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். அதாவது, என் அத்தை ஜெயலலிதாவுக்கு என்னைப் பிடிக்காத காரணத்தால், நான் ஒதுக்கிவைக்கப்பட்டதாக ஒரு செய்தி வெளியானது. இதைப்பற்றி, நம்பத்தக்க பிரபல தமிழ் நாளிதழ்கள் வெளியிட்டுள்ளன. 

 என்னுடைய கேள்வி என்னவென்றால், ஆறுமுகசாமி ஆணையத்தில் நடந்துவரும் விசாரணைக்கும், எங்களைப்பற்றிய தனிப்பட்ட உறவுகளுக்கும், அதாவது எனக்கும் அத்தைக்குமோ, சித்தி அல்லது தாத்தா, பாட்டிக்குமோ உள்ள உறவு எப்படி இருந்தது என்பது அநாகரிகமானது, அநாவசியமானது என்றும் நான் கருதுகிறேன். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இரண்டாவதாக, இந்தச் செய்திக்கு அல்லது தகவலுக்கு என்ன அடிப்படை ஆதாரம் உள்ளது? என்னுடைய அத்தை ஜெயலலிதா, எப்பொழுதாவது ஊடகங்களை அழைத்து, 'என் அண்ணன் மகள் தீபாவை எனக்குப் பிடிக்கவில்லை' என பேட்டியளித்தாரா? அல்லது என்னை (தீபாவை) போயஸ் கார்டனுக்குள் அனுமதிக்க வேண்டாம் என்று கூறியதுண்டா?

எப்போதாவது, யாரிடமோ, நேரிலோ அல்லது மறைமுகமாகவோ அதுபோன்று ஜெயலலிதா தெரிவித்ததுண்டா? விசாரணை ஆணையத்தில் ஆஜரான ஜெயலலிதாவின் தனி உதவியாளர் பூங்குன்றன், என்னைப் பலமுறை அழைத்து, ஜெயலலிதா என்னை வரச் சொன்னதாகவும் ஜெயலலிதாவுக்கு கடிதங்கள் தர வேண்டும் என்றும் என்னைக் கேட்டிருக்கிறார். அதனடிப்படையில் நானும், பூங்குன்றனை பலமுறை சந்தித்துப் பேசியிருக்கிறேன்.

என்னுடன் பேச வேண்டும் என்று ஜெயலலிதா விரும்பியதாக என்னிடம் தெரிவித்ததே பூங்குன்றன்தான் என்பதை, நான் பலமுறை என்னுடைய பேட்டிகளின்போது தெரிவித்து, விளக்கம் அளித்திருக்கிறேன். இப்படி இருக்கும்போது, 2014-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, அவரே என்னை அழைத்ததாக பூங்குன்றன் தெரிவித்து, என்னை பெங்களூருக்கு வரவழைத்தார். அங்கு, பலமணி நேரம் காக்கவைக்கப்பட்டு பிறகு, நான் திரும்ப வரவேண்டியதாகிவிட்டது. இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்திருக்கும் நிலையில், என் அத்தைக்கு என்னைப் பிடிக்காது என்று வெளியாகும் செய்திகள் வதந்தியானவை.

இதுபோன்ற பொய்யான, தவறான செய்திகளை எல்லாம் பரப்ப வேண்டாம் என்று ஊடகங்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். எந்தவொரு செய்தியை நீங்கள் வெளியிடுவதானாலும், அதன் முழுமையான ஆதாரங்களை வெளியிடுங்கள். நீதிபதி ஆறுமுகசாமி ஒருவேளை எங்கள் (ஜெயலலிதாவுடன்) உறவு எப்படி இருந்தது என்று கேட்டிருந்தால், அதைப்பற்றி நான் பேசியிருக்கக்கூடும். ஆயினும் எந்தக் காலகட்டத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் என் அத்தை என்னை வெறுக்கவோ, ஒதுக்கவோ கிடையாது. அவர் மிகவும் நல்லவர். பாசம் மிக்கவர். எதிர்பாராதவிதமாக இப்படியெல்லாம் நடந்துவருகிறது என்பதை உணர்வுபூர்வமாக உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க