ஸ்டெர்லைட் சீல் வைப்பு நிரந்தரமானது அல்ல! உண்மை கண்டறியும் குழு விளக்கம்

தூத்துக்குடியில் மக்கள்மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடுகுறித்து,  உயர்மட்ட உண்மை அறியும் குழு மேற்கொண்ட கள ஆய்வின் இடைக்கால அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும் என்பதில் தூத்துக்குடி மக்கள் மிக உறுதியாக இருக்கிறார்கள் எனக் குறிப்பிட்டுள்ளது. 

உண்மை கண்டறியும் குழு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடுகுறித்து கள ஆய்வுசெய்ய, இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த 23 பேர் கொண்ட குழுவினர், ஓய்வுபெற்ற மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி கோல்சே பட்டேல் மற்றும் ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் ஆகியோர் தலைமையில், 4 குழுக்களாக மக்களிடம் பொது விசாரணையை மேற்கொண்டனர். 

இந்த ஆய்வு மற்றும் விசாரணையின் இடைக்கால அறிக்கையை தூத்துக்குடியில் பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்டுப் பேசிய நீதிபதிகள், 'மாவட்ட நிர்வாகம், போராடிய அனைத்துத்தரப்பு மக்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல், போராட்டக்காரர்களைப் பிரித்தாளுகின்ற உத்தியாகவும் சூழ்ச்சியாகவும் தெரிகிறது. 144 தடை உத்தரவு அமலில் இருந்தபோது, கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்த அனுமதி அளித்தது ஏன்? 

அமைதிக் கூட்டத்தில் ஆட்சியர் பங்கேற்காததை கவனத்தில் கொள்ள வேண்டும். கடந்த மே 18-ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, சூழ்நிலையை அறிவதற்காக 9 வருவாய்த்துறை அலுவலர்கள் நிர்வாக நடுவர்களாக நியமிக்கப்பட வேண்டும். ஆனால், ஒரு வட்டாட்சியர்கூட நியமிக்கப்படவில்லை என்பதை துணை வட்டாட்சியரின் முதல் தகவல் அறிக்கையில் இருந்தே அறியலாம். 

மே 22-ம் தேதி ஆட்சியர், துணை ஆட்சியர், வட்டாட்சியர் ஆகியோர் நகரில் இல்லை என்பதும் தெளிவாகிறது. 144 தடை உத்தரவு, மக்களுக்குத் தெளிவாகச் சென்றடையவில்லை. அதனால், தடை உத்தரவில் எந்த விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதை பொது விசாரணைக்குழு தெரிவிக்கிறது. 

கலவரத்தில் கறுப்புச்சட்டை, கழுத்தில்  சிலுவை அணிந்திருந்தவர்களை காவல்துறையினர் குறிவைத்துத் தாக்கியுள்ளனர். இந்தத் தடியடியால், பல நபர்கள் மாற்றுத்திறனாளியாகவும் உளவியல் நோயாளியாகவும் உருவாக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு தற்போதைய அரசாணை, சீல் வைப்பு ஆகியன நிரந்தரமானது அல்ல. நிரந்தரமாக மூடப்பட்டு, இயந்திரங்கள் பிரிக்கப்பட்டு, கட்டடங்கள் இடிக்கப்பட்டு இடம் வெறுமையாக்கப்பட வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்கு, அரசால் நினைவுச்சின்னம் நிறுவப்பட வேண்டும். துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமானவர்கள்மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையின் அச்சுறுத்தல்கள் நிறுத்தப்பட வேண்டும். இதுவரை அப்பாவி மக்கள்மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் ரத்துசெய்யப்பட வேண்டும். ஆலை மூடப்பட வேண்டும் என்பதில் தூத்துக்குடி மக்கள் மிக உறுதியாக இருக்கிறார்கள்' என தெரிவித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!