போலீஸாரின் பொறுப்பற்ற தன்மையே தூத்துக்குடி-கச்சநத்தம் கலவரங்களுக்குக் காரணம்: பழ.நெடுமாறன்

 போலீஸாரின் பொறுப்பற்ற தன்மையே தூத்துக்குடி,கச்சநத்தம் கலரங்களுக்குக் காரணம் எனத் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் குற்றச்சாட்டு.

போலீஸாரின் பொறுப்பற்ற தன்மையே தூத்துக்குடி, கச்சநத்தம் கலவரங்களுக்குக் காரணம் எனத் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் குற்றச்சாட்டு.

பழ.நெடுமாறன்

ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பழ.நெடுமாறன், 'தூத்துக்குடியில் ஸ்டைர்லைட் ஆலை அமைந்த நாளிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாக மக்கள் அதை எதிர்த்துப் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள் .இப்போது, ஆலையை விரிவாக்கம்செய்துவிடக் கூடாது என்பதற்காக, 99 நாள்கள் அமைதியான முறையில் போராடினார்கள்.100-வது நாளான்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவது எனக்கூறிவிட்டு போராட்டம் நடத்தினார்கள். போராட்டம் கலவரத்தில் முடியும் என நினைத்திருந்தால், அப்போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள், குடும்பம் குடும்பமாகச் சென்று கலந்துகொண்டிருக்க மாட்டார்கள்.

தூத்துக்குடி கலவரத்துக்கு மக்கள் காரணமில்லை. ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமே தனது கையாட்களை வைத்து கலவரத்தை ஏற்படுத்தி இருக்கலாம். ஆலை நிர்வாகம் பல அரசியல் கட்சிகளுக்கும், அதிகாரிகளுக்கும் பல நன்கொடைகளை வழங்கியிருக்கிறது. இந்த நன்கொடைகள், காவல்துறை அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. பிரேதப் பரிசோதனை முடிவுகள் வரும்போது, காவல்துறையின் கொடுமைகள் முழுமையாகத் தெரிய வரும். சாதாரண உடையில் அப்பாவி மக்களை காவல்துறை சுட்டது, இந்தியாவில் இதுவே முதல் முறையாகும். சீருடை அணியாமல் மக்களை நோக்கி துப்பாக்கியால் சுடச்சொன்னது யார் எனத் தெரிய வேண்டும். இதையும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க வேண்டும். துப்பாக்கியால் சுடும்போது, முழங்காலுக்குக் கீழேதான் சுட்டிருக்க வேண்டும். மாறாக, மார்பிலும் தலையிலும்,வாயிலும் சுடச்சொன்னது யார் என்பதுகுறித்தும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். 

கலவரத்தில், சமூக விரோதிகள் புகுந்துவிட்டார்கள் என முதல்வர் உட்பட பலரும் கூறுகின்றனர். அப்படியானால், கலவரத்துக்குள் சமூக விரோதிகள் புகாமல் தடுத்திருக்க வேண்டிய காவல்துறை அதை ஏன் செய்யவில்லை என்பது ஒரு கேள்விக்குறியாக நிற்கிறது. எனவே, காவல்துறை தூத்துக்குடி கலவரத்தில் பொறுப்பில்லாமல் செயல்பட்டிருக்கிறது என்பது தெளிவாகிறது. இதேபோல, கச்சநத்தம் கலவரத்திலும் 3 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். அவர்களது வீடுகள், பொதுச்சொத்துகள் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. கலவரத்தில் 3 பேரை கொலை செய்தவர்கள்மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்களை முன்கூட்டியே கைதுசெய்திருந்தால், கொலைகளையும் சேதங்களையும் தவிர்த்திருக்கலாம். எனவே, கச்சநத்தம் கலவரத்திலும் காவல்துறை தனது கடமையை செய்யத் தவறி, பொறுப்பில்லாமல் செயல்பட்டிருக்கிறது.

உச்ச நீதிமன்றமே இப்பிரச்னையை நேரில் புலன் விசாரணை செய்ய வேண்டும். சமூக விரோதிகள், தூத்துக்குடி கலவரத்தில் புகுந்து விட்டார்கள் என முதல்வர் சொன்னதை ரஜினியும் சொல்லி வழிமொழிந்திருப்பது மிகவும் வெட்கக்கேடானதாகும்.தேசத்துரோக வழக்கில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கைது, கண்டிக்கத்தக்கது. மக்கள், போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்கள்மீது காவல்துறை பொய் வழக்குகளைப் போட்டு கைதுசெய்திருக்கின்றனர்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!