வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (04/06/2018)

கடைசி தொடர்பு:08:22 (04/06/2018)

54 கண்டுபிடிப்பாளர்களின் பெயர்களைச் சொல்லி சாதனை படைத்த நான்கு வயது சிறுமி..!

 54 பொருள்களைக் கண்டுபிடித்த கண்டுபிடிப்பாளர்களின் பெயர்களை ஒரே நிமிடத்தில் சொல்லி அசத்திய தமிழினி என்ற சிறுமிக்கு இந்தியா சாதனை புத்தகம்  அதற்கான சாதனை சான்றிதழை வழங்கி கௌரவித்தது.

54 பொருள்களைக் கண்டுபிடித்த கண்டுபிடிப்பாளர்களின் பெயர்களை ஒரே நிமிடத்தில் சொல்லி அசத்திய தமிழினி என்ற சிறுமிக்கு, இந்திய சாதனைப் புத்தகம் சாதனைச் சான்றிதழை வழங்கி கௌரவித்துள்ளது.

ராமநாதபுரம் சாதனை சிறுமி தமிழினிக்கு சான்றிதழ் வழங்கல்

ராமநாதபுரம் சிகில் ராஜவீதியைச் சேர்ந்த தினேஷ் மற்றும் ராஜராஜேஷ்வரி தம்பதியின் மகள் தமிழினி (4). இவர், ராமநாதபுரம் நேஷனல் அகாடமி மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் யூ.கே.ஜி படித்துவருகிறார். இவர், ஒரே நிமிடத்தில் 54 பொருள்களின் கண்டுபிடிப்பாளர்களின் பெயர்களை சிறிதும் யோசிக்காமல் கடகடவெனச் சொல்லி அசத்துகிறார். இந்தச் சாதனையை அவர் படிக்கும் பள்ளியில் பொதுமக்கள், பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியை ஜெயலெட்சுமி ஆகியோர் முன்பாக நிகழ்த்தினார். இதற்கு முன்பு ஜெய்ப்பூரைச் சேர்ந்த மூன்றரை வயது சிறுமி, ஒரே நிமிடத்தில் 36 பொருள்களின் கண்டுபிடிப்பாளர்களின் பெயர்களைச் சொல்லியதே சாதனையாக இருந்துவந்தது. தற்போது, 54 கண்டுபிடிப்பாளர்களின் பெயர்களை ஒரே நிமிடத்தில் கூறி அசத்திய தமிழினியின் இச்சாதனையை அங்கீகரிக்கும் விதமாக, இந்திய சாதனைப் புத்தகத்தில் தமிழினியின் பெயர் பதிவேற்றப்பட்டது.

இந்திய சாதனைப் புத்தக தென்னிந்தியப் பொறுப்பாளரான விவேக்ராஜ், சாதனைச் சிறுமி தமிழினிக்கு தங்கப்பதக்கம் அணிவித்து சாதனைச் சான்றிதழையும் வழங்கினார். சிறுமி தமிழினியை நேஷனல் அகாடமி மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெயலெட்சுமி மற்றும் நிர்வாக ஆலோசகர் சங்கரலிங்கம் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள்.