தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு திட்டமிடப்பட்ட ஒன்று..! சீதாராம் யெச்சூரி ஆவேசம்

தூத்துக்குடியில், போராட்டக்காரர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டுமென்று, துப்பாக்கிச்சூடு முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட பயங்கரம் என்று தெரிகிறது என சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். 

சீத்தாராம் யெச்சூரி

துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க, மார்க்ஸிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தூத்துக்குடிக்கு வருகைதந்தார். அவர், துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, ``தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்தேன். காயம் அடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்றுவருபவர்களையும் பார்த்தேன். துப்பாக்கிச் சூடு என்பது முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட பயங்கரம் என்று தெரிகிறது. வன்முறையில் ஈடுபட்டவர்களைச் சுட்டோம் என்று போலீஸார் கூறுவதை நம்ப முடியவில்லை. ''

அதுபோன்று வன்முறை நடந்திருந்தால், போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு கடைபிடிக்கவேண்டிய நடைமுறைகளை படிப்படியாகப் பின்பற்றி இருப்பார்கள். ஆனால், இங்கு நேரடியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கிக் குண்டுகள், பெரும்பாலும் வயிற்றிலும் அதற்கு மேலேயும் பட்டுள்ளது. இது, கலவரத்தைக் கட்டுப்படுத்தும் முறை அல்ல. போராட்டக்காரர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நடந்ததாகத் தெரிகிறது.

துப்பாக்கிச் சூடு சம்பவம் நடக்கும்போது, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் அங்கு இல்லாதது வினோதமானது. இதனால், கீழ்நிலை அதிகாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டுள்ளார்கள். இதுகுறித்து பணியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதியைக்கொண்டு விசாரணை நடத்த வேண்டும். அல்லது உயர் நீதிமன்றக் கண்காணிப்பில் சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும்.

தூத்துக்குடியில் போலீஸார் தொடர்ந்து குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஒருவித பதற்றமான சூழல் உள்ளது. ஆகையால், உடனடியாக போலீஸாரைக் குறைக்க வேண்டும். பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.

வேதாந்தா நிறுவனம், தூத்துக்குடி ஆலையால் பாதிக்கப்பட்ட விவசாயம், நிலத்தடி நீர், மக்களுக்கான பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு ஆலையை மூட உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, சட்டரீதியாக நிலைத்து நிற்காது. அதைச் சரிசெய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!